சாலையோரம் இறந்து கிடந்த விஜயகாந்த் பட இயக்குநர் – திரையுலகினர் அதிர்ச்சி
மாநகர காவல், வெற்றி மேல் வெற்றி போன்ற படங்களின் மூலம் பிரபல இயக்குநராக திகழ்ந்த தியாகராஜன் சாலையோரம் இறந்து கிடந்த விஷயம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர் பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி, ஏவி.எம்.ன் தயாரிப்பில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற மாநகர காவல் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் M.தியாகராஜன். குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற மாநகர காவல் திரைப்படம், விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஏவிஎம் ஸ்டூடியோ அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இன்று காலை இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த விருகம்பாக்கம் போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்த நபர் M.தியாகராஜன் என்பது தெரிய வந்திருக்கிறது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் தியாகராஜன். சினிமா தொடர்புடைய டிஎப்டி(DFT) படித்த இவர், ஆரம்பகாலத்தில் சொந்த ஊர் அருகே விபத்தில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்று பின் அதிலிருந்து மீண்டு சினிமாவில் படங்கள் இயக்கினார். சினிமாவில் வெற்றி மேல் வெற்றி, மாநகர காவல் என இரு படங்களை இயக்கினாலும் அதன்பின் அவரால் சினிமாவில் சோபிக்க முடியவில்லை.
வடபழனியில் அழுக்கான உடை, கையில் செய்திதாளோடும் அம்மா உணவத்தின் ஆதரவிலும் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். சினிமாவில் வெற்றி மேல் வெற்றி என அவர் படம் கொடுத்திருந்தாலும் நிஜ வாழ்வில் அவர் வெற்றி மேல் வெற்றி பெறாதது சோகம் என்றாலும் இப்படி அனாதையாக இறந்து கிடந்தது பெரும் துயரம் என்றே சொல்லலாம்.
மாநகர காவல், வெற்றி மேல் வெற்றி போன்ற படங்களின் மூலம் பிரபல இயக்குநராக திகழ்ந்த தியாகராஜன் சாலையோரம் இறந்து கிடந்த விஷயம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.