சாதனைப் படத்தில் மற்றொரு நாயகியாக அறிமுகமாகும் டாலி ஐஸ்வர்யா

0
148

சாதனைப் படத்தில் மற்றொரு நாயகியாக அறிமுகமாகும் டாலி ஐஸ்வர்யா

மாடலிங் துறையில் எட்டு வருட அனுபவம் கொண்ட டாலி ஐஸ்வர்யா விரைவில் வெளியாக இருக்கும் சாதனைப் படமான ‘கலைஞர் நகர்’ படம் மூலம் மற்றொரு நாயகியாக அறிமுகமாகிறார். அது மட்டுமல்ல ஒரே சமயத்தில் இன்னும் மூன்று படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ‘கலைஞர் நகர்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. SR பிலிம் பேக்டரி சார்பில் சிவராஜ் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குநர் சுகன் குமார் என்பவர் இயக்கியுள்ளார். நரேஷ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். வசனங்களை பாபா கென்னடி எழுதியுள்ளார்.

பிரஜின் ஹீரோவாகவும், மிகமிக அவசரம் புகழ் பிரியங்கா ஹீரோவாகவும், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தில் மற்றொரு நாயகியாக நடித்த அனுபவம் குறித்தும் தனது மற்ற படங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை டாலி ஐஸ்வர்யா.

“நடிப்பு தான் ஆர்வம் என்றாலும் மாடலிங் மூலமாக பயணத்தை ஆரம்பித்து சினிமாவில் நுழைவது தான் சரியாக இருக்கும் என நினைத்தேன். ஏற்கனவே காதலே கோமாளி என்கிற குறும்படத்திலும் நடித்துள்ளேன். கலைஞர் நகர் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாக அதில் நடித்த ஒரு நடிகை எதிர்பாராத விபத்தில் சிக்கியதால் படப்பிடிப்பு துவங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் அந்த வாய்ப்பு என்னை தேடி வந்தது. இரண்டாம் நாளே படப்பிடிப்பு, அதுவும் 23 நேரத்தில் எடுக்கப்படுகின்ற சாதனை படத்தில் நடிக்க வேண்டும் என்கிற பிரமிப்பும் படபடப்பும் கொஞ்சம் இருக்கத்தான் செய்தது,

அதேசமயம் முதல் நாளே படத்தின் ஸ்கிரிப்டை படித்ததும் நம்பிக்கை பிறந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஒரே நாளில் அதுவும் 19 லொக்கேஷன்களில் மாற்றி மாற்றி படப்பிடிப்பு நடைபெற்றது. ஒவ்வொரு லொக்கேஷனுக்கும் மாறுவதற்கு 10 முதல் 15 நிமிட இடைவெளி மட்டுமே இருந்தது.

இந்தப்படம் மேடை நடனக்கலைஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் கதையாக உருவாகி இருக்கிறது, அவர்கள் மீது பலர் கொண்டுள்ள தவறான அபிப்ராயத்தை மாற்றும் படமாக இது இருக்கும். இதில் பிரஜின், பிரியங்கா என நடிப்பு அனுபவம் மிகுந்த இருவருடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது,

ஒரேநாளில் படமாக்கப்பட்டாலும் கூட இந்த படத்தில் இடம்பெறும் திருவிழா காட்சிகள் மிக பிரமாண்டமானதாக இருக்கும். பல துணை நடிகர்கள் பங்கு பெற்ற இந்த திருவிழா காட்சியை இந்த படத்திற்காகவே உருவாக்கினார்கள். படத்தின் இயக்குநர் சுகன் குமார் ஏற்கனவே ‘பிதா’ என்ற குறும்படத்தை 23.23 மணி நேரத்தில் இயக்கி சாதனை செய்தவர். இந்தமுறை முழு நீள திரைப்படத்தை 23 மணி நேரத்தில் ஏழு நிமிடம் முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விட்டார்.

யுனிவர்சல் ஜீனியஸ் என்கிற சாதனைக்காக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சினிமாவில் எனது அறிமுகமே இப்படி ஒரு சாதனை படம் மூலமாக அமைந்ததில் மகிழ்ச்சி.

இதுதவிர தற்போது இரவின் கண்கள் என்கிற சயின்டிஃபிக் திரில்லர் படத்திலும் ஹேப்பி பர்த்டே ஜூலி என்கிற திரில்லர் மற்றும் கடைசி தோட்டா என்கிற கிரைம் திரில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன். இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஜானரில் உருவாகி வருகின்றன.

மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்கள், அதிக வசனம் கொண்ட, நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகள், லவ் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்கு அதிகம் விரும்புகிறேன்.

சினிமாவில் ஏற்கனவே நிறைய ஐஸ்வர்யாக்கள் இருக்கின்றனர். அதே சமயம் மாடலிங் உலகில் டாலி ஐஸ்வர்யா என்று தான் என்னை பலருக்கும் தெரியும். அதனால சினிமாவிற்கும் அதே பெயரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டேன்”. என்று கூறியுள்ளார்.