சர்வதேச அளவில் சாதித்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்த 6 வயது சிறுவன் திஷன்.. அப்படி என்ன செய்து இருக்காரு தெரியுமா?
ஃபேஷன் ரன்வே என்பது இந்திய மற்றும் சர்வதேச மாடல்களுக்கான மிகப்பெரிய மாடலிங் நிறுவனங்களில் ஒன்றாகும், இது உலக அளவிலான அழகு மற்றும் பேஷன் அரங்கில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதில் ஆண்டுதோறும் சர்வதேச அளவிலான ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல் (JMI) பட்டத்திற்கான போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த ஆண்டிற்கான ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல் (JMI 2022) உலக இறுதிப் போட்டி அக்டோபர் 18 முதல் 21 ஆம் தேதி வரை துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் கோவை மாவட்டம் கணபதியை சேர்ந்த 6 வயது சிறுவன் திஷன்.S தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டியில் கலந்து வெற்றி பெற்றுள்ளார். இவர் இதற்கு முன்னதாக மே மாதம் கேரளாவில் உள்ள குமரகோமில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான ஜூனியர் மாடல் இந்தியா போட்டில் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்து இந்த சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கோவையில் தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் இதற்கு முன்னதாக தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு பேஷன் ஷோக்களில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறார். இவர் தற்போது பங்கேற்ற சர்வதேச போட்டியில் இந்தியா, மங்கோலியா, உஸ்பெகிஸ்தான், இங்கிலாந்து, இந்தோனேசியா, கென்யா, அமெரிக்கா, துருக்கி, அர்மேனியா, ஈராக் போன்ற சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் மேற்கத்திய ஆடை சுற்று, தேசிய பெருமையை பிரதிபலிக்கும் ஆடை , கலாச்சார ஆடை சுற்று, திறமை கண்டறியும் சுற்று மற்றும் நேர்காணல் போன்ற பல சுற்றுகள் நடைபெற்றன.
இவைகளில் அதிக புள்ளிகளை பெற்று வெற்றி பெற்று இந்த ஆண்டிற்கான சர்வதேச ஜூனியர் மாடல் 2022 பட்டத்தினை பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் மேலும் சிறந்த படைப்பிலான தேசிய உடை , சிறந்த திறமை மற்றும் “பிரின்ஸ் ஆப் ஆசியா” போன்ற பட்டங்களை வென்றுள்ளார்.