சர்ச்சையாக வேண்டும் என்று திட்டமிட்டே ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர் உருவாக்கப்பட்டுள்ளது! எழுத்தாளர், வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் சரமாரி கேள்வி!!
அஞ்சலி சிவராமன் நடித்த தமிழ் திரைப்படம் ‘பேட் கேர்ள்’ தற்போது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் படங்கள் இயக்குவது மட்டும் இல்லாமல், படங்களை தயாரிக்கவும் செய்கின்றார். இவரது, கிராஸ் ரூட்ஸ் புரொடக்ஷன் நிறுவனம், தயாரித்துள்ள படம் பேட் கேர்ள். இந்தப் படத்தினை இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய, வர்ஷா பரத் இயக்கியுள்ளார். படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், ‘பேட் கேர்ள்’ டீசர் வெளியானதிலிருந்து, பிராமண சமூகத்தை எதிர்மறையாக சித்தரித்ததாக குற்றச்சாட்டுகளுடன் சர்ச்சையைத் தூண்டியுள்ளது.
‘பிராமணர் சமூகத்தை’ மோசமான முறையில் சித்தரித்ததற்காக பேட் கேர்ள் படத்தின் தயாரிப்பாளர்களை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஒரு பிராமணப் பெண்ணை எதிர்மறையாக சித்தரித்ததற்காக படத்தின் டீசர் நெட்டிசன்களிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இயக்குனர் மோகன் ஜி., தவிர, பல இணையவாசிகள் பிராமண சமூகத்தை சாதகமற்ற முறையில் சித்தரித்ததற்காக திரைப்பட தயாரிப்பாளர்களை விமர்சித்தனர்.
தற்போது ‘பேட் கேர்ள்’ டீசரை பார்த்துவிட்டு எழுத்தாளர், வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
இப்படியான பெண்கள் இந்தச் சமூகத்தில் இல்லையா? இருக்கிறார்கள்தான். எத்தனை சதவிகிதம்? அந்த புறக்கணிக்கப்பட வேண்டிய கூட்டத்தில் ஒரு பெண்ணைக் கதாநாயகியாக்கி சமூகத்தில் உருவாக்க நினைக்கும் புதிய கருத்தியல்தான் என்ன?
இதன் இயக்குநர் ஒரு பெண். அவரின் மேடைப் பேச்சில் அத்தனை சிந்தனைக் குழப்பங்கள்.
பெண்கள் புனிதர்களாக இருக்க அவசியமில்லை. மனிதர்களாக இருந்தால் போதும்.
ஒரு பெண் என்பவள் பத்தினியாக இருக்க வேண்டும், தாய்மை என்றால் போற்றத்தக்கது போன்ற சமூகம் உருவாக்கியுள்ள கருத்துக்கள் பெண்களுக்கு பிரெஷராக இருக்கிறது.
ஆன்களில் குறைபாடுள்ள கதாப்பாத்திரங்களை நிஜத்திலும், திரையிலும் நிறைய பார்த்திருக்கிறேன். இந்தக் கதாநாயகியும் குறைபாடுள்ளவள்தான். ஆனால் பெண்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

பெண்ணியம் குறித்து தமிழில் நச்சென்று பேசிய அவள் அப்படித்தான், சிறை, மனதில் உறுதி வேண்டும், நேர்கொண்ட பார்வை, இந்தியில் தப்பட் போன்ற படங்களை எல்லாம் இந்தப் புதுமுக இயக்குநர் பார்த்திருக்கிறாரா?
ஆனால்.. டீஸரின் நோக்கம் சர்ச்சை ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டுமே.
அமரன், சூரரைப் போற்று போன்ற நிஜ மனிதர்களின் வாழ்க்கைப் படங்களில் கதாநாயகன் ஒரு பிராமின் என்று நேர்மையாகக் காட்டாத தமிழ் சினிமா.. சர்ச்சைக்குரிய படங்களில் பிராமினை அடையாளப்படுத்தும் போக்கை நான் கண்டிக்கிறேன் என்று எழுத்தாளர், வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார்.
Bad Girl – Teaser
பட்டுக்கோட்டை பிரபாகர் முகநூல் பதிவு