கொரோனா தொற்றுக்கு பலியான இயக்குநர் தாமிரா

0
6

கொரோனா தொற்றுக்கு பலியான இயக்குநர் தாமிரா

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் தாமிரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 53. இவர், இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் அவரையும், பாரதிராஜாவையும் இணைத்து ‘ரெட்டைச்சுழி’ என்கிற படத்தை இயக்கினார். அதன்பிறகு நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனியோடு சினிமாவில் இணைந்து பணியாற்றியவர் என்பதால் அவரை வைத்து இரண்டாவது படமாக ‘ஆண் தேவதை’ என்ற படத்தை இயக்கினார்.

மூன்றாவது படத்தை ஜெமினி நிறுவனத்துக்காக இயக்க கதை தயாரிப்பில் இருந்தபோது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். 20 நாட்களுக்கு முன்பு சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் தாமிரா இன்று காலை மூச்சுத்திணறல் அதிகமாகி உயிரிழந்தார். இவருக்கு 3 மகன்கள், 1 மகள் உள்ளனர். இயக்குனர் தாமிராவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவமனையிலிருந்து நேராக திருநெல்வேலிக்கு கொண்டுசெல்லப்படுகிறார். அவரது சொந்த ஊரில் இயக்குநர் தாமிராவின் இறுதிப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.