கொரோனா ஊரடங்கில் வீட்டில் செடி வளர்க்க ஆண்ட்ரியா யோசனை: குவியும் பாராட்டுகள்!
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு நடிகைகள் வீடுகளில் முடங்கி உள்ளனர். ஓய்வு நேரத்தை ஓவியம் வரைவது, புத்தகங்கள் படிப்பது, ஓ.டி.டி. தளங்களில் சினிமா பார்ப்பது, செல்லப்பிராணிகளுடன் கொஞ்சுவது என்று கழிக்கிறார்கள்.
தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான படங்களில் நடித்தும், ஏராளமான பாடல்களை பாடியும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
நடிப்பை தாண்டி சமூக நலனிலும் அக்கறை கொண்டவர். பல்வேறு சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமூக பிரச்சினைகளுக்காக பலமுறை கேள்வி எழுப்பியுள்ளார். கொரானா பாதிக்கப்பட்ட இவர், வீட்டு தனிமையில் இருந்து சமீபத்தில்தான் குணமடைந்தார். தற்போது அரசு சார்பில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் பயனுள்ள பணிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில், நடிகை ஆண்ட்ரியா செடிகள் வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் செடி வளர்க்கும் புகைப்படங்களுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘’கடந்த வருடம் கொரோனா ஊரடங்கில் இருந்து எனது வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் பசுமையான தாவரங்களை வளர்த்து வருகிறேன். சிறிய பெரிய செடிகள் எதுவாக இருந்தாலும் அவை நாம் வாழும் இடத்தை உயிர்ப்போடு வைக்கிறது. உங்கள் வீட்டில் பால்கனி இருந்தால் செடிகளை நட்டு வையுங்கள். இல்லையேல் வீட்டை சுற்றி செடிகள் வைத்து வளர்க்கலாம், அதுவும் முடியவில்லை என்றால் ஓவியம் வரைந்த பாட்டில்கள் வைக்கலாம். எனது வீட்டின் உள்ளேயும், வெளியேயும் உள்ள தாவரங்கள் நேர்மறை ஒளியை உருவாக்குவதாக நான் நம்புகிறேன். இந்த இருண்ட காலகட்டத்தில் இது தேவையாக இருக்கிறது. இதை எல்லோரும் சவாலாக ஏற்று உங்கள் வீட்டை பசுமையாக்க முயற்சி செய்யுங்கள்’’ என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.