கே.வி.ஆனந்த் மறைவுக்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த், தனுஷ், ஏ.ஆர்.முருகதாஸ், உட்பட திரையுலக பிரபலங்கள் இரங்கல்

0
17

கே.வி.ஆனந்த் மறைவுக்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த், தனுஷ், ஏ.ஆர்.முருகதாஸ், உட்பட திரையுலக பிரபலங்கள் இரங்கல்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. இவர் அயன், மாற்றான், கோ, அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கி உள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், கே.வி.ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி” என பதிவிட்டுள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அநேகன் படத்தில் நடித்த நடிகர் தனுஷ், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “நேர்மையான மனிதர் இறந்துவிட்டார். அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்த இனிமையானவர் கே.வி.ஆனந்த். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள், அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், கே.வி.ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பெரும் திறமை கொண்ட ஒளிப்பதிவாளர்-இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு, மிகுந்த வேதனையை தருகிறது. திரை உலகின் பேரிழப்பு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கே.வி.ஆனந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

நடிகை ராதிகா கே.வி.ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதேபோல், நடிகைகள் குஷ்பு,  ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.