கேம் ஒவர் திரை விமர்சனம் ரேட்டிங் 2.5/5

0

கேம் ஒவர் திரை விமர்சனம் ரேட்டிங் 2.5/5

ஒய் நாட் ஸ்டூடியோஸ் எஸ்.சசிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கேம் ஒவர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அஸ்வின் சரவணன்.

தனியான வசிக்கும் இளம் பெண் ஒருவர் சைகோ ஆசாமியால் கொடூரமாக கொலை செய்யப் படுகிறார்.அதன் பின் இது போன்ற சம்பவங்கள் பல நடக்க சைக்கோ நபர் யார் என்று தெரியாமல் தலைப்புச் செய்தியாக பரபரப்பாக பேசப்படுகிறது.

அதே சமயம் கேம் டெவலப்பர் டாப்சி உளவியல் சம்பந்தப்பட்ட நோயால் அவதிப்பட அவருக்கு உதவியாக வினோதினி இருந்து பார்த்துக் கொள்கிறார். வீட்டிலேயே தனிமையில் பேக்-மேன் விளையாட்டை விளையாடிக்கொண்டு பொழுதை போக்குகிறார். இதற்கு காரணம் ஒரு வருடத்திற்கு முன்னால் புது வருடப்பிறப்பு பிறக்கப்போகும் அன்று டாட்டூ குத்திக் கொண்டு ஜாலியாக டாப்சி வெளியே வர சிலர் கடத்தி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட அவர்களிடமிருந்து தப்பிக்கும் டாப்சிக்கு அன்று முதல் இருட்டை கண்டால் பயம் ஏற்பட, தன் பெற்றோர், நண்பர்கள் என்று யாரையும் சந்திக்காமல் தனிமையில் வேலைக்கார பெண்ணுடன் இருந்து வருகிறார்.இதற்காக உளவியல் மருத்துவரின் ஆலோசனையையும் எடுத்துக் கொள்கிறார். படிப்படியாக குணமாகிக் கொண்டு வரும் டாப்சிக்கு டாட்டூ குத்திய கையில் வலி ஏற்பட அதற்கு காரணம் என்ன என்று டாட்டூ கடையில் சென்று விசாரிக்கிறார்.
அப்பொழுது தான் அந்த டாட்டூ இறந்த பெண்ணின் அஸ்தி கலந்த மையை தவறுதலாக தனக்கு டாட்டூ மூலம் குத்திவிட்டார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியாகிறார். கடையை விட்டு வெளியே வரும் டாப்சியை பார்த்து பலர் ஏளனமாக கிண்டல் செய்ய, இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு உயிரை மாய்த்துக் கொள்ள மாடியில் இருந்து குதிக்க, இரண்டு கால்களும் அடிபட்டு நடக்க முடியாமல் வீட்டில் வீல் சேரில் முடங்கி போகிறார். தற்கொலைக்கு பலமுறை முயற்சி செய்யும் டாப்சி தோல்வியே தழுவுகிறார். அப்பொழுது மீண்டும் டாட்டூ குத்திய கையில் வலி ஏற்படுகிறது.

அதனால் தோல் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி டாட்டூவை அழிக்க நினைக்கும் போது இறந்த பெண்ணின் தாய் வந்து டாப்சியை சந்திக்கிறார். கான்சர் வியாதியால் மூன்று முறை போராடி வென்று இறுதியில் சைக்கோ ஆசாமியால் கொலை செய்யப்பட்டு இறந்த தன் மகளின் மனோதைரியத்தை பார்த்து வியந்து அவளின் அஸ்தி கலந்த மையை டாட்டூ மூலம் தன் கையில் குத்திக் கொள்ள ஏற்பாடு செய்யும் போது தவறுதலாக மாற்றி டாப்சிக்கு அந்த மையால் டாட்டூ குத்தி விட்டதாக தாய் கண்ணீர் மல்க சொல்ல அதைக் கேட்டு மனம் மாறி டாட்டூவை அழிக்காமல் விடுகிறார்.

இதனிடையே ஒரு நாள் பல மாதங்களான தேடப்படும் சைக்கோ ஆசாமி டாப்சியை கொலை செய்ய அந்த வீட்டிற்கு வருகிறார். டாப்சி அந்த சைக்கோவிடமிருந்து தப்பித்தாரா? இதற்கு உதவும் பேய் யார்? இறுதியில் என்ன நடந்தது? என்பதே கதிகலங்கடிக்கும் க்ளைமேக்ஸ்.

பயம் கலந்த பார்வை. இருட்டைப் பார்த்தாலே பழைய நினைவுகளால் அலறும் விதம். தனிமைப்படுத்திக் கொண்டு பயத்தை போக்க முயற்சிக்கும் வழிகள், பலமுறை தற்கொலைக்கு முயல்வது, டாட்டூவால் ஏற்படும் விபரீதம், அந்த டாட்டூவே அவரின் உயிரை காப்பாற்றி கொடுக்கும் ஆயுதமாக மாறுவது, சைக்கோ ஆசாமியிடமிருந்து தப்பிக்க பல வழிகளை முயற்சி செய்வது என்று டாப்சி ஸ்வப்னா என்ற கதாபாத்திரமாகவே மாறி நீண்ட இடைவேளைக்குப் பிறகு படம் முழுவதும் தன் மிகையில்லா இயல்பான நடிப்பாற்றலால் ஆக்ரமித்து அசத்தி விடுகிறார்.பாராட்டுக்கள்.
வேலைக்கார பெண்ணாக வினோதினி டாட்டூ ஸ்பெஷலிஸ்டாக ரம்யா, சஞ்சனா நடராஜன், அனீஷ் குருவில்லா ஆகியோரின் யதார்த்தமான நடிப்பு படத்தின் வெற்றிக்கு வழி வகுக்கிறது.

வசந்தின் ஒளிப்பதிவு, ரிச்சர்ட் எடிட்டிங், ரான் ஈதன் யோஹானின் இசையும் படத்தின் மூன்று துருவங்களாக நின்று சைக்கோ க்ரைம் த்ரில்லர் கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

இயக்கம்-அஸ்வின் சரவணன். முதல் காட்சியிலேயே பதற வைக்கும் கொலை அதை செய்த சைக்கோ யார்? என்ற கேள்வியுடன் தொடங்க அதில் டாப்சியின் சிதைக்கப்பட்ட வாழ்க்கை, டாட்டூ என்று புது கோணத்தில் கதைக்களத்தை விரிவுபடுத்தி அதில் சைக்கோ கொலையாளிகளையையும், பயமுறுத்தாத பேயையும் இணைத்து சொல்லிய விதம் அருமை. புர்pயாத புதிராக செல்லும் கதை, போகப்போக வேகமெடுத்து, மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் விதம், டாப்சியின் வாழ்க்கையே கேம் போல மூன்று லைப் கொடுத்து விபரீதம் நடக்கப்போவதை உணர்த்தும் காட்சிகள் விறுவிறுப்பாகவும் அசத்தலாகவும் மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் கொடுத்துள்ளார். டாட்டூ குத்திய பெண்களுக்கு மட்டும் குறி வைக்கும் சைக்கோ ஆசாமிக்கு காரணம் என்ன? ஒரு வருடம் சென்றும் போலீசிடம் மாட்டாமல் தப்பிக்க முடியுமா? என்று சில கேள்விக் கணைகளுக்கு விடை தெரியாமல் செல்லும் கதைக்களம் என்றாலும் அதை ஆழமாக சொல்லாமல் ரசிகர்களின் யூகத்திற்கும், கற்பனைத்திறனுக்கும் விட்டு விடுகிறார் இயக்குனர் அஸ்வின் சரவணன். சட்டென்று புரியாத கதைக்களம், அதை ஆழந்து கூர்மையாக யோசித்து பார்த்தால் மட்டுமே கொலை செய்து வீடியோ எடுத்து மகிழும் சைக்கோ ஆசாமிகளின் தன்மை புரியும், டாட்டூ பேயின் உண்மை விளங்கும். வெல்டன்.

மொத்தத்தில் கேம் ஒவர் ஹாலிவுட் படம் போல தமிழில் ஒரு பரபரக்கும் க்ரைம் த்ரில்லர்.

நம்ம பார்வையில் ‘கேம் ஒவர்’ படத்துக்கு 2.5 ஸ்டார் தரலாம்.