கிரிக்கெட் வீரரை மணக்கும் ஷங்கர் மகள் – பிரமாண்ட செட்டில் திருமணம்!

0
25

கிரிக்கெட் வீரரை மணக்கும் ஷங்கர் மகள் – பிரமாண்ட செட்டில் திருமணம்!

ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர்.

இயக்குனர் ஷங்கருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்தவர் ஐஸ்வர்யா. டாக்டரான இவருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜுன் 27) திருமணம் நடக்கிறது.

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தொழிலதிபர் தாமோதன் என்பவரது மகன் ரோஹித்துக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் வரும் ஞாயிறு இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் நடக்கிறது. தாமோதரன் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளராவார். இவரது மகன் ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விஜய் ஹசாரே தொடரில் புதுச்சேரி அணி கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித், அந்த தொடரில் அதிகபட்சமாக மும்பைக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் அடித்திருந்தார்.

இவர்களது திருமணத்தை மகாபலிபுரத்தில் பிரமாண்ட செட் அமைத்து நடத்துகிறார் ஷங்கர். பிரபல கலை இயக்குனர் முத்துராஜ் இந்த அரங்கை அமைத்து வருகிறார். இவர் 2.0 படத்தின் கலை இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு நடக்கும் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்ட பின் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த ஷங்கர் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.