காதலை மையமாக கொண்ட படங்கள் என்றுமே வெற்றி பெறும் – ‘பியூட்டி’ இசை வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு
ஓம் ஜெயம் தியேட்டர் சார்பில் ஆர்.தீபக் குமார் தயாரித்து ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் ‘பியூட்டி’. அறிமுக இயக்குநர் கோ.ஆனந்த் சிவா இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகனாக ரிஷி நடிக்க, நாயகியாக அறிமுக நடிகை கரீனா ஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் காயா கபூர், சிங்கமுத்து, ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் ஆர்.தீபக் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு இலக்கியன் இசையமைக்க, தமிழக தலைமை செயலாளரும், எழுத்தாளருமான வெ.இறையன்பு மற்றும் தமிழ்முருகன் பாடல்கள் எழுதியுள்ளனர். சங்கர்.கே படத்தொகுப்பு செய்ய, கூல் ஜெயந்த் நடனம் அமைத்துள்ளார். ரவிவர்மா கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஃபயர் கார்த்திக் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, கிளாமர் சத்யா மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 4 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்கள் சங்க தலைவருமான கே.ராஜன், இயக்குநர் அரவிந்தராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய படத்தி இயக்குநர் கோ.ஆனந்த் சிவா, “நான் பாக்யராஜ் சாரின் நேரடி சிஷ்யன் கிடையாது. பாக்யா பத்திரிகையில் ஓவியராகத்தான் பணியாற்றினேன். ஆனால், அவரிடம் உதவி இயக்குநர்கள் விவாதித்த விஷயங்கள், அவர் இல்லாமல் ஒரு குழுவாக சேர்ந்து விவாதிப்பார்கள், அந்த விவாதங்களில் நான் இருப்பேன். பெண்களை மையப்படுத்திய படங்கள் என்றுமே வெற்றி பெறும். எங்கள் இயக்குநரின் படங்களும் அந்த வகையை சார்ந்த படங்கள் தான். அதனால் தான் அவருடைய படங்கள் இன்றும் பேசப்பட்டு வருகிறது.
முற்றிலும் வித்தியாசமான, எதிர்மறை எண்ணம் கொண்ட ஒருவருடன் நான் பழக நேர்ந்த பொழுது, அவரின் செயல்பாடுகள் என்னைப் பெரிதும் பாதித்தன. அவரிடம் நான் பார்த்த பல அதிர்ச்சிகரமான சம்பவங்களை அடிப்படையாக வைத்து நான் எழுதி, இயக்கியிருக்கும் படம் இந்த ‘பியூட்டி’. இந்த படம் முழுமையான கமர்ஷியல் படமாக மட்டும் இன்றி சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகவும் இருக்கும்.” என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்பதற்காக தான் அவர்களுக்கு ஆதரவாக மேடைகளில் குரல் கொடுத்து வருகிறேன். கே.பாக்யராஜ் போன்ற ஜாம்பவான்களின் ஆதரவோடு தான் அதை செய்து வருகிறேன்.
உடல் நிலை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இப்போது தான் வந்திருக்கிறேன். சில காலம் மேடைகளில் பேச வேண்டாம் என்று தான் இருந்தேன். ஆனால், இந்த படத்தின் பி.ஆர்.ஓ கிளாமர் சத்யா, நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும், பாக்யராஜ் சார் கூட கேட்டாரு என்று சொன்னார். அதனால் தான் வந்துவிட்டேன். என் தாய் தந்தை செய்த தர்மத்தால் தான் நான் இன்று உங்கள் முன்னால் பேசிக்கொண்டிருக்கிறேன். அதனால் தர்மம் செய்யுங்கள், இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் கொடுக்க வேண்டும், தர்மம் தான் நம்மை வாழ வைக்கும். நான் என்னிடம் இருப்பதை கொடுக்கவில்லை என்றாலும், பிறர் எனக்கு கொடுப்பதை அப்படியே தானம் செய்து விடுகிறேன். பலரை தானம் செய்ய சொல்கிறேன். இதற்கு காரணம் திருக்குறள் தான். எனக்கு அனைத்து திருக்குறளும் தெரியாது. ஆனால், சில குறல்கள் என் மனதில் பதிந்து விட்டது. அவை தான் என்னை ஒழுக்கமாகவும், எந்த தவறும் செய்யாமலும் வாழ வைத்தது. திருவள்ளூவர் மகான், அவரைபோல் யாரும் இவ்வளவு பெரிய விஷயங்களை மிக எளிமையாக சொல்ல முடியாது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் திருவள்ளுவரின் புகைப்படத்தை வைத்து போற்ற வேண்டும், பிள்ளைகளுக்கு திருவள்ளுவரை பற்றியும், திருக்குறளை பற்றியும் சொல்லிக்கொடுத்தால் பிள்ளைகள் ஒழுக்கமானவர்களாக வளர்வார்கள்.
பியூட்டி என்பது உடல் அழகல்ல, உள்ளத்தின் அழகு. நல்ல குனம், ஒழுக்கமான வாழ்க்கை, தவறு செய்யாமல் இருத்தல், பிறர்க்கு உதவி செய்தல் போன்ற நல்ல மனம் தான் பியூட்டி. இந்த பியூட்டி படத்தின் பாடல்கள் மிக சிறப்பாக வந்திருக்கிறது. இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளர் என அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். நாயகன், நாயகி இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவரும் இங்கு ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. இதுபோன்ற விழாக்களுக்கு வந்தால் அவர்களுக்கு தான் நல்லது. ஆனால் அது அவர்களுக்கு தெரிவதில்லை. இந்த படத்தை சிறப்பாக தயாரித்திருக்கும் தீபக் குமாருக்கு போட்ட பணம் வர வேண்டும், அப்படி வந்தால் அவர் இன்னொரு படத்தை தான் தயாரிக்கப் போகிறார். படத்தின் டிரைலரை பார்க்கும் போது படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. இயக்குநர் ஆனந்த் சிவா சிறப்பான படத்தை கொடுத்திருப்பார் என்ற நம்பிக்கையையும் டிரைலர் கொடுக்கிறது. படம் நிச்சயம் வெற்ற் பெறும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், “இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது பாக்யா குடும்ப நிகழ்ச்சி போல தான் இருக்கிறது. பாக்யாவில் பணியாற்றிய பலர் இங்கு வந்திருக்கிறார்கள், மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் ஆனந்த் சிவா நன்றி மறவாமல் அனைவரும் அழைத்திருக்கிறார். அவர் அதிகமான புத்தகங்கள் படிப்பதாக சொன்னார்கள். படிப்பது என்றுமே நல்லது, அது நம்மை கைவிடாது. இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த போது பியூட்டி என்றதுமே ஏதோ காதல் படம் என்று தான் நினைத்தேன். காரணம், காதல் கதை தான் என்றுமே வெற்றி பெறும். அதனால் ஆனந்த் சிவா காதலை கையில் எடுத்திருக்கிறார் என்று நினைத்தேன். ஆனால், டிரைலரை பார்க்கும் போது காதலை தாண்டிய ஒரு கதை இருப்பது தெரிகிறது.
ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படத்தை எடுக்க் ஒரு ஹாலிவுட் காதல் படத்தின் வசனம் தான் எனக்கு தூண்டுதலாக இருந்தது. நான் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற போது பல நாடுகளில் அந்த படத்தின் போஸ்டரை பார்த்தேன், அதனால் அந்த படத்தின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டு, அங்கிருக்கும் திரையரங்கில் பார்த்தேன். அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் தான், என்னை ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படத்தின் கதை எழுத தூண்டியது. அதனால், காதல் படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் ஒரு ஈர்ப்பு இருக்கும். இந்த படத்திலும் காதலும் முக்கிய பங்கு வகிப்பதால் நிச்சயம் ரசிகரகளிடம் வரவேற்பு பெறும் என்று நம்புகிறேன்.
இந்த படம் இந்த அளவுக்கு வருவதற்கு ஒளிப்பதிவாளர் ஆர்.தீபக் குமார் தான் காரணம். படத்தை முதலில் தயாரித்தவர் விலகிவிட்ட நிலையில், இந்த படத்தை எப்படியாக கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவரே தயாரிப்பாளராகி முழுமையாக படத்தை முடித்ததாக சொன்னார்கள். அப்படி என்றால் அவர் ஆனந்த சிவா மீதும், இந்த கதை மீதும் எவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. அவருடைய நம்பிக்கை வீண்போகாது. பியூட்டி படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.
முன்னதாக தயாரிப்பாளரும், ஒளிப்பதிவாளருமான ஆர்.தீபக் குமார் விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்ததோடு, வரவேற்புரை நிகழ்த்தினார்.