கர்ணன் விமர்சனம் : தமிழ் சினிமாவை வாழ வைக்கும் ‘கர்ணன்’ வி கிரேஷன்ஸ் ‘கலைப்புலி’ எஸ்.தாணு

0
11

கர்ணன் விமர்சனம் :

தமிழ் சினிமாவை வாழ வைக்கும் ‘கர்ணன்’ வி கிரேஷன்ஸ் ‘கலைப்புலி’ எஸ்.தாணு

தூத்துக்குடி மாவட்டத்தில் பொடியன்குளம் என்ற குக்கிராமத்தில் அப்பா, அம்மா, அக்காவுடன் வாழ்ந்து வருகிறார் கர்ணன் (தனுஷ்);. இந்தக் கிராமத்திற்கென பேருந்து நிறுத்தமே இல்லாத நிலையில், ஆதிக்க ஜாதியினர் வசிக்கும் பக்கத்து கிராமமான மேலூருக்கு சென்றுதான் பேருந்தைப் பிடிக்க வேண்டியிருக்கிறது. மேலூரில் இருக்கும் சிலர் முதன் முதலாக கல்லூரி செல்ல பஸ் ஏற வந்த கௌரியை அசிங்கப்படுத்துகிறார்கள். இதனால் கோபமடைந்த தனுஷ் (கர்ணன்) அவர்களை வெளுத்து வாங்குகிறார். பதிலுக்கு தனுஷை பழிவாங்க மேலூர் மக்கள் நினைக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனை செல்ல தனது கணவன் மற்றும் 10 வயது மகனுடன் பேருந்துக்காகக் பொடியன்குளம் மெயின் ரோட்டில் நிற்கும் போது, பஸ் நிற்காமல் செல்கிறது. அம்மா வலியில் துடிக்க, அதைப் பார்த்து பொறுக்கமுடியாமல், நிறுத்தாமல் செல்லும் பேருந்தின் மீது அந்தச் சிறுவன் கல்லெறிகிறான். அந்த சமயத்தில் அங்கே வரும் கர்ணன், தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பேருந்தை அடித்து நொறுக்குகிறான். இந்தச் சம்பவத்தை விசாரிக்க பொடியங்குளம் கிராமத்துக்கு வரும், போலீஸ் அதிகாரி நட்டி, தலைமையில் காவல்துறை அந்த கிராமத்தை துவம்சம் செய்ய முயல்கிறது. ஊர் பெரியவர்களை காவல்நிலையத்தில் வரவைத்து அடித்து உதைக்கிறார். இதையறிந்து வரும் தனுஷ், காவல் நிலையத்தை சூரையாடி ஊர் பெரியவர்களை மீட்கிறார். கோபமடைந்த நட்டி, தனுசையும் ஊர் மக்களையும் பழிவாங்க நினைக்கிறார். பொடியங்குளம் கிராம மக்களுக்கு ரட்சகனாக இருக்கும் கர்ணன் ஊர் மக்களை காப்பாற்றினாரா? புறக்கணிக்கப்படும் அந்த கிராமத்துக்கு நண்மைகள் பெற்று தந்நதாரா? என்பதே மீதிக் கதை.

கர்ணனாக வரும் தனுஷ், யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். கதை தேர்வு மற்றும் அவரது உடல்மொழி கச்சிதமாகப் பொருந்தியுள்ளது

குணசித்திர கதபாத்திரத்தில் தாத்தாவாக வரும் லால், கர்ணனுடன் சேர்ந்து அதகளம் செய்திருக்கிறார். லாலின் கதாபாத்திரமும் நடிப்பும் அவரை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்கிறது. தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி அனைவரது மனதில் நிற்கிறார்.

நாயகியாக வரும் ரஜிஷா விஜயன், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி பொடியன்குளம் ஊர்ப் பெண்ணாகவே வாழ்ந்துள்ளார்.

தனுஷின் அக்காவாக லட்சுமி ப்ரியா, திரைப்படத்தில் கவனம் பெற்ற கௌரி, குணச்சித்திர கதாபாத்திரத்தில் யோகிபாபு, அதிகாரமிக்க போலீஸ் அதிகாரிக்கு உண்டான மிடுக்கான கதாபாத்திரத்தில் நட்டி, கர்ணனின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

சண்முகராஜா, ஜி.எம்.குமார், ‘பூ’ ராம், குதிரை சிறுவன் ஆகியோர் பொடியன்குளத்தின் மக்களாகவே காட்சியளிக்கிறார்கள்.

ஒவ்வொரு துணைக் கதாபாத்திரங்களின் நிறைவான பங்களிப்பை நிச்சயமாக பாராட்டப்பட வேண்டும்.

ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் அவரோட ஒர்க் மற்றும் வசனங்கள் படத்தின் வெற்றிக்கு வலுச் சேர்த்துள்ளன.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரும் படத்தின் அடுத்த கதாநாயகன்கள்.

கண்டா வரச் சொல்லுங்க, உட்ராதீங்க யப்போவ் போன்ற பாடல்கள ரசிக்க வைக்கின்றன. கண்டா வரசொல்லுங்கா என் மகனை கையோடு கூட்டி வருங்கா அவனா கண்டா வரசொல்லுங்கா……. இந்த பாடல், இசை வெறி உறிபோனவன் தான் இந்த மாதிரி அடிக்க முடியும் எழுத முடியும் பாட முடியும். பேக்கிரவுண்ட் மியூசிக் கூடுதல் பலம்.

‘பரியேறும் பெருமாள்” திரைப்படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இரண்டாவது படம் கர்ணன். வலிமையான திரைக்கதை அமைத்து படத்தில் பலரது நடிப்பைக் கச்சிதமாகப் கையாண்டிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். வித்தியாசமான படைப்பை திரையுலகிற்கு கொடுக்கும் இயக்குனர்களின் பட்டியலில் மாரி செல்வராஜ் இணைந்துவிட்டார்.

தமிழ் சினிமாவை வாழ வைக்கும் ‘கர்ணன்’ வி கிரேஷன்ஸ் ‘கலைப்புலி’ எஸ்.தாணு தான். இவரால் மட்டுமே இன்று இது போன்ற உணர்வுமிக்க கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து வெற்றிகாண முடியும்.

மொத்தத்தில் தமிழ் சினிமா வரலாற்றில் தலை சிறந்த காவியமாக உருவெடுக்கும் கர்ணன். கர்ணன் கம்பீரம்.