கதிர் விமர்சனம்

கதிர் விமர்சனம்

துவாரகா ஸ்டுடியோஸ் சார்பில் தினேஷ் பழனிவேல் தயாரித்து எழுதி இயக்கிய கதிர் படத்தில் வெங்கடேஷ்,சந்தோஷ் பிரதாப்,ரஜினி சாண்டி,பாவ்யா ட்ரிகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில்  பிரஷாந்த் பிள்ளை இசையமைக்க, ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய, தீபக் த்வாரகநாத் படத்தொகுப்பை செய்துள்ளார்.பாடல்கள் – கார்த்திக் நேத்தா, உமா தேவி, சண்டை பயிற்சி – ஸ்டன்னர் சாம்,சவுண்ட் டிசைன் – மிக்ஸிங் – ஸின்க் சினிமா,மக்கள் தொடர்பு – ஏய்ம் சதிஷ்.
இன்ஜினியரிங் பட்டதாரியான கதிர் தந்தையின் வற்புறுத்தலால் சென்னையில் வேலை தேட நண்பனின் வீட்டிற்கு வருகிறார். அங்கே வீ;ட்டின் உரிமையாளரான வயதான ரஜினி சாண்டியுடன் முதலில் சண்டை போட்டாலும், பின்னர் அவரிடம் நட்பாக பழகுகிறார். ரஜினி சாண்டி ஆங்கிலம் கற்று தர, நல்ல வேலை கிடைக்கும் நேரத்தில் கதிர் அதனை விட்டு வந்து விடுகிறார்.முன்னாள் காதலி அந்த நிறுவனத்தில் வேலை செய்வதால், வேலையை துறந்து வந்து விட்டதாக கதிர் சொல்ல, ரஜினி சாண்டி சமாதானம் செய்கிறார்.பின்னர் தன் ஊருக்கு செல்ல நினைக்கும் கதிர், கூடவே ரஜினி சாண்டியையும் அழைத்துச் செல்கிறார். அங்கே தன் நண்பர்களை அறிமுகம் செய்து ஊரையும் ரஜினி சாண்டிக்கு சுற்றி காண்பிக்கிறார். இந்நிலையில் கதிரின் நண்பர் விவசாயம் செய்ய கடன் வாங்கி அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள இதனால் மனமுடையும் கதிருக்கு ரஜினி சாண்டி அறிவுரை கூறி ஊரிலேயே இருந்து வேலை செய்து நண்பனின் குடும்பத்தை காப்பாற்றுமாறு கூறுகிறார். தன் வாழ்க்கையில் நடந்த சோகத்தையும் பகிர்ந்து கொள்ளும் ரஜினி சாண்டி பின்னர் சென்னைக்கு சென்று விடுகிறார். கதிர் நண்பர்களுடன் கலந்தாலோசித்து விவசாய விளை பொருட்களை விற்கும் இணையதளத்தை ஆரம்பிக்கிறார். அதன் பின் கதிர் விவசாய விளை பொருட்களை விற்றாரா? அவருக்கு ஏற்பட்ட சிக்கல்கள் என்ன? அதனை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெற்றார்? என்பதே மீதிக்கதை.
கதிராக வெங்கடேஷ் கல்லூரி மாணவனாக, வேலையில்லா பட்டதாரியாக, நட்பை மதிப்பவராக, தொழில் முனைவோராக என்று தன் வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்ததை தனக்கு வழிகாட்டியாக இருந்தவர்களை நினைத்து  எண்ணி மகிழும் கதாபாத்திரம். நக்கல், நையாண்டி, கலகலப்பு, காதல், விரக்தி, சாதனையின் மகிழச்சி அனைத்தையும் தன்னுள் கொண்டு வந்து சிறப்புடன் செய்துள்ளார்.
மலையாள நடிகை ரஜினி சாண்டியின் அற்புதமான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம். மற்றும் சந்தோஷ் பிரதாப், பாவ்யா ட்ரிகா ஆகியோர் அத்தனையும் ரசிக்குப்படி அழுத்தமாக பதிவு செய்துள்ளனர்.
இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கி இருக்கும்  பிரஷாந்த் பிள்ளைக்கு பாராட்டுக்கள், பின்னணி இசை படத்திற்கு பலம்.  சென்னை வீடு மற்றும் கோயமுத்தூர் சுற்றுவட்டார கிராமத்து அழகை தனக்கே உரிய பாணியில் அழகாக படம் பிடித்து காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன்.
தீபக் த்வாரகநாத் படத்தொகுப்பு கவனிக்க வைக்கிறது.
கதிர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், சந்தித்த இடர்பாடுகள், உதவிய நல்லுள்ளங்கள், சாதித்து காட்டும் நண்பர்கள் என்ற திரைக்கதையில் காதலையும், போராட்ட ஃபிளாஷ்பேக் கதையையும் இணைத்து விவசாயத்தை மையப்படுத்தி சமபந்தி உணவாக ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக தெரியுமாறு சிறப்பாக கொடுத்து விருந்து படைத்துள்ளார் இயக்குனர் தினேஷ் பழனிவேல்.
மொத்தத்தில் துவாரகா ஸ்டுடியோஸ் சார்பில் தினேஷ் பழனிவேல் தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் கதிர் வித்தியாசமான கோணத்தில் நட்பை பிரதானப்படுத்தி சுவாரஸ்யமான திருப்பங்களுடன் திரும்பி பார்க்க வைத்து ஆச்சர்ய பட வைக்கிறது.