ஓடிடி-யில் வெளியாக தயாராகும் தமிழ் படங்கள்!

0
9

ஓடிடி-யில் வெளியாக தயாராகும் தமிழ் படங்கள்!

தமிழகத்தில் திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து பல படங்கள் ஓடிடியில் வெளிவர தயாராகி வருகின்றன. இது குறித்த ஒரு தொகுப்பை இங்கே குறிப்பிடுகிறோம்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே ஓடிடி-யில் படம் பார்க்கும் வழக்கம் அதிகரித்து வந்தாலும் அவ்வாறு தமிழில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் மோசமான விமர்சனத்தை பெற்றதால் சுதாரித்துக்கொண்ட
ஓடிடி நிறுவனங்கள் தற்காலிகமாக தமிழ் படங்களை வெளியிடுவதை நிறுத்தி வைத்திருந்தன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டடிருப்பதால், தேங்கி நிற்கும் படங்களை வாங்கி வெளியிடும் முயற்சியில் ஓடிடி நிறுவனங்கள் இறங்கியுள்ளன. ஆனால் இந்த முறை பெரிய நடிகர்கள் நடித்த படங்களை விடவும் சிறு பட்ஜெட்டில் தயாரான தரமான படங்களை வாங்கவே இந்நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.

குறிப்பாக தமிழில் இன்னும் சில தினங்களில் காலூன்ற இருக்கும் பிரபல சோனி லைவ் நிறுவனம், பல சிறு பட்ஜெட் படங்களை கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. அந்த வகையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி, ஸ்ரேயா நடிப்பில் பல ஆண்டுகளாக ரிலீசுக்கு காத்திருக்கும் நரகாசூரன், விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கி இருக்கும் கடைசி விவசாயி, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருவி இயக்குனர் அருண் பிரபு இயக்கியிருக்கும் வாழ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதுபோக நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நெற்றிக்கண், பாரதிராஜா நடிப்பில் உருவாகியிருக்கும் ராக்கி போன்ற படங்களும் ஓடிடி ரிலீசுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் ஆர்வம் காட்டினாலும் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஏற்கனவே ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்று விட்டுவிட்டதால் இப்படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்க ஓடிடி நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. எனினும் எப்படியேனும் இப்படத்தை ஓடிடியில் கொண்டுவர தயாரிப்பு தரப்பு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.