ஒரு வாரத்திற்குள் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் – ஆய்வு மேற்கொண்ட செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்!

0
25

ஒரு வாரத்திற்குள் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் – ஆய்வு மேற்கொண்ட செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் 150 படுக்கை வசதிகளுடன் கொரோனா் சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் 75 கொரோனாதொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், கொரோனா சிகிச்சை மையத்தை செய்தித்துறை அமைச்சர் மு.ப.சாமிநாதன் ஆய்வு செய்தார். பிறகு மருத்துவ வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உடனிருந்தார்.

அதனைத் தொடர்ந்து முழு ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய கடைகள் உள்ளிட்ட விற்பனையகங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் மக்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் வழங்கப்படும் காய்கறிகள் மற்றும் மளிகை விநியோகங்களை அமைச்சர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று கட்டுப்படுத்தும் வகையில் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி வருகின்ற வாரத்திற்குள் நோய்தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் வரும்.

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டு, மக்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் 150 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.

மாவட்டத்தில், இன்னும் படுக்கை வசதிகள் தேவை ஏற்படும் நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிகப்படுத்தப்பட உள்ளது. இந்த முழு ஊரடங்கு காரணமாக மக்கள் அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு வசதியாக மளிகை மற்றும் காய்கறி பொருட்கள், பால் முதலியவை அவர்களுக்கு கிடைக்கும் வகையில் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அப்பணிகள் முழுவதுமாக சிறப்பாக நடைபெற்று வருவதாக கூறிய அவர் மக்கள் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருந்து இந்த கொரோனா நோய் தொற்றிலிருந்து முழுவதுமாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

உடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் இல.பத்மநாபன் பல்லடம் நகர செயலாளர் ராஜேந்திர குமார் ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.