ஐபிஎல் இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் ‘லால் சிங் சத்தா’ டிரெய்லரை வெளியிடுகிறார் அமீர்கான்
பாலிவுட் நடிகர் அமீர்கானின் நடிப்பில் உருவாகி வரும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தின் ட்ரெயிலர், ஐபிஎல் இறுதிப் போட்டி துவங்குவதற்கு முன்னதாக நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்ஸ் நடிப்பில், 1994-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் ‘தி ஃபாரஸ்ட் கம்ப்’. ஆஸ்கர் விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை அள்ளிய இந்தத் திரைப்படத்தின், அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் தான் ‘லால் சிங் சத்தா’. இந்தப் படத்தில் கதாநாயகனாக அமீர்கானும், அவருக்கு ஜோடியாக கரீனா கபூரும் நடித்துள்ளனர். அமீர்கானின் நண்பராக, ராணுவ வீரராக நாக சைதன்யா இந்தப் படத்தில் நடித்துள்ளதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக படம் வெளியிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டு வந்தநிலையில், ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்த வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒன்றில், ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகவிருந்த நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம், ‘லால் சிங் சத்தா’ படத்திற்காக வழிவிட்டு, வேறு ஒரு தேதியில் வெளியாக உள்ளதாக அமீர்கான் குறிப்பிட்டிருந்தார்.
சமீபகாலமாக தென்னிந்தியப் படங்கள் பாலிவுட்டில் வசூலில் சாதனை செய்துவருவதால், இந்த மாற்றம் செய்யப்பட்டது. இதனால் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. நீண்டநாள் தயாரிப்பில் இருந்த அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தின் ட்ரெயிலர் எப்போது வெளியாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்தநிலையில், ஐபிஎல் இறுதிப் போட்டி துவங்குவதற்கு முன்னதாக நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் 15-வது சீசன் ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், வருகிற மே 29-ம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டி துவங்குவதற்கு முன்னதாக இந்திய திரைப்பட பின்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட கலை மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை காணும் வகையில் மிகப் பிரம்மாண்டமான திரை பொருத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் தான் அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்படுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. உலக வரலாற்றிலேயே இதுபோன்ற பிரம்மாண்ட கிரிக்கெட் நிகழ்ச்சியில், முதன்முதலாக படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட உள்ளதால், சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.