ஏலே விமர்சனம்

0
65

ஏலே விமர்சனம்

கணக்கம்பட்டி கிராமத்தில்  முத்துக்குட்டி(சமுத்திரகனி) ஐஸ் விற்று மகன் மணிகண்டன், மகள் சனாவை பாசத்துடன் வளர்கிறார். ஊர்மக்களிடம் பல தில்லுமுல்லு செய்து ஏமாற்றி பணம் பறிப்பது, மகிழ்ச்சியாக வாழ்வது என்ற குறிக்கோளுடன் தன் மனதிற்கு பட்டதை செய்து சந்தோஷமாக இருக்கிறார். சிறு வயதிலிருந்தே தன் தந்தையின் செயலை கண்டு அவமானப்படும் மகன் மணிகண்டன் அப்பாவை வெறுப்புடனே பார்க்கிறார். பின்னர் சென்னையில் வேலையில் இருக்கும் மணிகண்டன் தந்தை இறந்து விட்டார் என்ற சேதி கேட்டு கிராமத்திற்கு வந்தாலும் தந்தையின் செயலே கண் முன் வருவதால் ஈடுபாடு இல்லாமல் சடங்குகளில் கலந்து கொள்கிறார்.  சாவு வீட்டில் தந்தை சமுத்திரகனியின் உடல் காணாமல் போய் விட தன் நண்பர்களுடன் சேர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்க இதில் வெற்றி பெற்றாரா? யார் இவ்வாறு செய்தது? எதனால்? காரணம் என்ன? என்ற கேள்விக்கு விடை தான் மீதிக்கதை.

இதில் அசத்தலான நடிப்பில் சமுத்திரகனி, மகனாக மணிகண்டன், காதலியாக மதுமதி, அக்காவாக சனா உதயகுமார், கைலாஷ், அகல்யா, தமிழரசன், சுதர்சன் காந்தி, கணேஷ், சரண்யா ரவிச்சந்திரன், ஆனந்த் என்று ஏகப்பட்ட யதார்த்தமான பாத்திரப்படைப்புகள் நச்சென்று பொருந்துகிறது.

கிராமத்திற்குள் நடக்கும் சம்பவங்களை நம்கண் முன் காட்சிகளான விவரிக்கும் அழகில் கவனம் ஈர்க்கிறர் ஒளிப்பதிவாளர் தேனி ஈஷ்வர்.

உயிரோட்டமான கதைக்கு கூடுதல் பொருப்புடன் இசையமைத்திருக்கின்றனர் கேபர் வாசுகி, அருள்தேவ்.

தந்தை-மகன் பாசத்தை வேறொரு கோணத்தில் திரைக்கதையமைத்து அதில் காதல், மோதல், நட்பு, மோசடி, செண்டிமெண்ட் கலந்து கொடுத்து இறுதியில் திடீர் திருப்பங்களோடு கதைக்களத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்  ஹலிதா ஷமீம். சில இடங்களில் நம்பும்படியாக இல்லைஎன்றாலும் பல இடங்களில் ரசிக்க வைத்திருப்பதால் இந்த குறை தெரியாமல் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் ஹலிதா ஷமீம்.

மொத்தத்தில் ஏலே அனைவரையும் பலே என்று சொல்ல வைக்கும்.