என் வாழ்க்கையில் முதல் முறையாக வருமான வரியை தாமதமாக செலுத்துகிறேன் – வருத்தப்படும் நடிகை கங்கனா ரனாவத்
நாட்டிலேயே அதிக வரி கட்டும் நடிகையாக விளங்கிவருவதாக தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், கொரோனா காரணமாக வேலையில்லாததால் வரி கட்ட முடியவில்லை என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
தனு வெட்ஸ் மனு, கிரிஷ் 3, குயின் உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்பவர் கங்கனா ரனாவத். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் தலைவி படத்தில் இவர் ஜெயலலிதாவாக நடித்திருக்கிறார். இந்த படம் ஊரடங்கு காரணமாக வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
ட்விட்டரில் புரட்சிகரமான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நடிகை கங்கனாவின் கணக்கை சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் முடக்கி வைத்தது. இதன் காரணமாக இன்ஸ்டாவில் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், தனக்கு வருமானம் இல்லாத காரணத்தினால் கடந்த ஆண்டு செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகையை தன்னால் கட்ட இயலவில்லை எனவும், அதே நேரத்தில் வரி பாக்கியை செலுத்த காலதாமதமானதால் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் நடிகை கங்கனா தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டா பதிவில், கிட்டத்தட்ட எனது வருமானத்தில் 45% அளவுக்கு வரியாக செலுத்துகிறேன். நாட்டிலேயே அதிக வரி செலுத்தும் நடிகையாக திகழ்ந்த போதிலும், தற்போது படங்கள் இல்லாததால் கடந்த ஆண்டின் வருமான வரி பாக்கித் தொகையில் பாதியளவை என்னால் இன்னமும் செலுத்த இயலவில்லை.
என் வாழ்க்கையில் முதல் முறையாக வருமான வரியை தாமதமாக செலுத்துகிறேன், ஆனால் அரசு இதற்காக எனக்கு அபராதம் விதித்துள்ளது. இருப்பினும் இந்த நடவடிக்கையை நான் வரவேறிறேன். நம் ஒவ்வொருவருக்கும் இந்த காலம் மிக கடினமானதாக இருக்கலாம், ஆனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அந்த காலத்தை விடவும் கடினமானவர்களாக இருப்போம்” என தெரிவித்துள்ளார்.