‘என்னை செதுக்கிய திரையுலக சிற்பிகள்’! ஜப்பான் டிரைலர் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியோடு நன்றி சொன்ன கார்த்தி!!

0
183

‘என்னை செதுக்கிய திரையுலக சிற்பிகள்’!

ஜப்பான் டிரைலர் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியோடு நன்றி சொன்ன கார்த்தி!!

இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசும்போது, “இன்று எனக்கு ஸ்பெஷலான ஒரு நாள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் மொத்த குழுவினரும் இப்படி ஒரு அற்புதமான தருணத்தை எனக்காக உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர். நான் எதையும் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் இந்த தருணம் நான் சரியான பாதையில் தான் செல்கிறேன் என்கிற ஒரு பலமான தன்னம்பிக்கையை எனக்கு கொடுத்திருக்கிறது. முதல் அன்பு என்பது நம் எல்லோருக்கும் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கிறது. அதன்பிறகு நண்பர்கள், பின்னர் மனைவியிடம் இருந்து.. ஆனால் அதை எல்லாம் விட ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு எந்தவித நிபந்தனையும் இல்லாதது. இவர்கள் அன்பு அனைத்தையும் நான் எனது முதல் படத்திலேயே பெற்று விட்டேன். அவர்களுடைய அன்பு தான் என்னை நீண்ட தூரம் ஓட வைக்கும் உந்து சக்தியாக இருக்கிறது.

இயக்குநர் மணிரத்னம் சாருக்கு நன்றி சொல்கிறேன்.. இந்த திரையுலகில் அவரைப் போன்ற ஒரு அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நபரை நான் பார்த்ததே இல்லை.. நடிப்பு பற்றி என்னவென்றே தெரியாத என்னைப் போன்ற ஒரு புதிய நபரான எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் அமீர் அண்ணா. என்னை முதன் முதலாக ஊக்கப்படுத்திய மனிதர் ஞானவேல் ராஜா தான். கைதி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட என்னுடைய படங்களில் சண்டை காட்சிகளில் எனக்கு தூணாக பின்னணியில் இருந்தவர் பாண்டியன் மாஸ்டர். சண்டைக் காட்சிகளின்போது ரிஸ்க்கான சூழ்நிலைகளில் அவர் கற்றுக் கொடுத்தது தான் என்னை பலமுறை காப்பாற்றி இருக்கிறது.

ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு நாட்களில் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு நன்றி. நேர்மறையின் ஒட்டுமொத்த உருவம் சிவா சார். பலரும் தாடி இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது என்று நினைத்தபோது பையா படத்தின் மூலம் என்னை வித்தியாசப்படுத்தி வெளிச்சம் போட்டு காட்டினார் இயக்குநர் லிங்குசாமி. என்னுடைய இசையமைப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஒப்பனை குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் வினோத் ரொம்பவே அரிதான மனிதர். சில வார்த்தைகள் மட்டும் பேசினாலும் தெளிவான சிந்தனை கொண்டவர். காஷ்மோரா போன்ற சிறந்த படத்தை கோகுல் எனக்காக கொடுத்திருக்கிறார். திரையரங்குகளில் அந்த படம் சரியாக போகாவிட்டாலும் கூட ஆன்லைனில் வெளியானபோது நல்ல வரவேற்பை பெற்றது. எப்போதுமே நல்ல விமர்சனங்களுடன் எனது திரையுலக பயணத்தை செம்மைப்படுத்தி கொடுத்ததற்காக பத்திரிகை நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

இந்த விழாவுக்கு வருகை தந்த சக நட்சத்திரங்கள் பற்றி அவ்வப்போது கார்த்தி பேசுகையில், “விஷாலின் தூண்டுதன் காரணமாகத்தான் நான் நடிகர் சங்கத்திற்குள் இழுத்து வரப்பட்டேன். அந்த வகையில் எனக்கு ஒரு நல்ல குடும்பம் கிடைத்தது. ஜெயம் ரவி பிறக்கும்போதே ஒரு ஹீரோ ஆகவே பிறந்தவர். ஆர்யா ஒரு நல்ல சிகிச்சையாளர். கூலான மனிதர்.. நல்ல அதிர்வுகளை ஏற்படுத்துவதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்..

இந்த நிகழ்வில் தமன்னா கலந்து கொண்டது எனக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ். மும்பையில் இருந்து இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இங்கே வருவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியபோது ஒரு குழுவாக மகதீரா படம் பார்ப்பதற்கு சென்றோம். அதுபோன்ற ஒரு நல்ல கதாபாத்திரத்திற்காக அவர் ஏங்கிக் கொண்டிருந்தார். ஆனால் சில வருடங்களுக்கு பிறகு பாகுபலி படத்தில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்திலேயே நடிக்கும் வாய்ப்பை பெற்றார். நாங்கள் மூன்று படங்களில் இணைந்து நடித்திருக்கிறோம்.. மூன்றுமே பிளாக்பஸ்டர் வெற்றி..

இயக்குநர் ரஞ்சித்தை பொறுத்தவரை அவர் என்னிடம் மெட்ராஸ் படத்தின் ஸ்கிரிப்ட்டை படிக்க கொடுத்தபோது அதில் நான் ஒரு பாகமாக இருக்கவில்லை. ஆனால் அந்த ஸ்கிரிப்ட்டை படித்தவுடன் அது ஈரானிய படங்களைப் போல சர்வதேச தரத்தில் இருந்தது” என்றார்.

மக்கள் கொடுத்த இந்த வெற்றியை மக்களோடு சேர்ந்து கொண்டாட வேண்டும்.. வாழ்க்கையில் இந்த உயரத்தை தந்த மக்களின் வாழ்க்கையில் சுக துக்கங்களில் பங்கெடுக்க வேண்டும் என நம் நாயகன் கார்த்தி அவர்கள் 25 சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம் நிதி உதவியும் தேவைப்படும் பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம், மக்களுக்குப் பயன்படும் மருத்துவமனைகளுக்கு ஒரு லட்சம் வீதம் ரூபாய் 25 லட்சம், மேலும் 25 நாட்களுக்கு சுமார் 25,000 பேர் பசியாற ரூபாய் 25 லட்சம் என சுமார் ஒரு கோடி வழங்க இருக்கிறேன்.

இது ஒரு நடிகன் செய்யும் உதவி அல்ல.. தன்னை வளர்த்த சமூகத்திற்கு ஒரு மனிதன் செலுத்தும் நன்றிக்கடன். இந்த சமூக செயற்பாட்டாளர்களை கண்டறிந்து உதவிய இ.ரா சரவணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.