என்னங்க சார் உங்க சட்டம் விமர்சனம் : சிந்திக்க வைத்து சாட்டையடி கொடுக்கும் படம்

0
77

என்னங்க சார் உங்க சட்டம் விமர்சனம் : சிந்திக்க வைத்து சாட்டையடி கொடுக்கும் படம்

ரண்டு கதைக்களம் கொண்ட படத்தில் முதல் பாதி 2கே கிட்ஸ்க்காக காதல், காமெடி கலந்து அமைந்துள்ளது. வேலைக்கு செல்லாமல் காதல் செய்து விட்டு ஏமாற்றும் பேர்வழி ஜெ.பி. இவரின் காதல் வலையில் சிக்கி ஏமாறும் பெண்கள், அவரின் திருமணத்தின் போது வந்து ஜே.பியின் காதல் லீலைகளை சொல்லி திருமணத்தை நிறுத்தினார்களா? இறுதியில் ஜெ.பி திருமணம் செய்து கொண்டாரா? திருந்தி வேலைக்கு சென்றாரா? என்பதே முதல் பாதி.

இடைவேளைக்குப் பிறகு வரும் கதைக்களம் சிக்கலான பாதையில் பயணித்து 90ஸ் கிட்ஸ்;க்காக ஜாதி, ஒதுக்கீடு பற்றி அமைந்துள்ளது. இரு துணைக்கதைகளாக செல்லும் படத்தில் அரசு வேலைக்கு நேர்காணலில் பொருளாதாரத்தில் பின் தங்கிய தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்பட்டாரா? அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அடிப்படையில் வேறு சமூகத்தை சேர்ந்த நபர் அர்ச்சகராக கோயிலில் தேர்ந்தெடுக்கப்பட்டாரா? என்பதே இரண்டாம் பாதியின் கதை.

இதில் கலகலப்புடன் காதல் மன்னனாக ஆர்.எஸ்.கார்த்திக், அம்மாவாகவும், பத்ரகாளியாகவும் இரண்டு வேறு விதமான கதைகளில் ரோகிணி, ஜூனியர் பாலைய்யா, தன்யா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், ஐரா, சுபா, கோபால், கயல் வின்சென்ட், ராகுல் தாத்தா, பகவதி பெருமாள், ரமேஷ், தாஸ் தீன், தனம், சாய்தினேஷ், விகாஸ், விஜயன், அபிநந்தன் ஸ்ரீனிவாசன், தண்டபாணி, அபிநயா, சந்தோஷ், மீரா மிதுன், அட்டகத்தி விஸ்வநாத் மற்றும் பலரின் பங்களிப்பு படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அருமையாக நடித்தும் சிலர் இரண்டு கதைகளிலும் வேறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.

ஒளிப்பதிவு-அருண்கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், படத்தொகுப்பு-பிரகாஷ் கருணாநிதி படத்தின் விறுவிறுப்புக்கு உத்திரவாதத்தை கொடுத்துள்ளனர்.

இதில் பல்லாங்குழி பாடல் மற்றும் என் ஜீரக பிரியாணி ஆகிய இரண்டு பாடல்களை எழுதியிருக்கும் பத்திரிகையாளர் இளம் கவிஞர் ஜெகன் கவிராஜின் வரிகளில் குணா பாலசுப்ரமணியன் கொடுத்திருக்கும் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் வண்ணமும் தாளம் போடவும் வைக்கிறது. முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கும் ஜெகன் கவிராஜின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இரண்டு கதைகள், முற்றிலும் மாறுபட்ட கோணங்கள், பலவித பிரச்னைகளையும், சிக்கல்களையும் ஒரு சேர கொடுத்து எதை சொல்வது, எதை விடுவது என்று தட்டுத்தடுமாறி தடையில்லாமல் ஒரே படத்தில் கொடுக்க நினைத்திருக்கும் இயக்குனர் பிரபுஜெயராம் முயற்சியை பாராட்டலாம். சில இடங்களில் பிட் நோட்டிசை எடுத்து பெரிய போஸ்டர் போல் ஒட்டியது போன்று ஒன்றுக்கொன்று முரணாக இருந்தாலும் முடிந்த வரை சொல்ல வேண்டிய கருத்தை ஆணித்தரமாக சொல்லி தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் பிரபு ஜெயராம். இதில் இடைச்சறுகலாக இயக்குனர் கதை சொல்லி தயாரிப்பாளர் கதையை தேர்ந்தெடுப்பதும், ஒருவரின் கதாபாத்திரத்தை மாற்றி தன்னுடைய கதாபாத்திரமாக நினைத்து கையாண்டிருக்கும் விதமும் கொஞ்சம் புதுமை, கொஞ்சம் இனிமை.

மொத்தத்தில் பேஷன் ஸ்டியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் இணைந்து தயாரித்திருக்கும் படம் என்னங்க சார் உங்க சட்டம் அனைவரும் பார்த்து ரசிக்க மட்டுமல்ல சிந்திக்க வைத்து சாட்டையடி கொடுக்கும் படம்.