எனை நோக்கி பாயும் தோட்டா திரை விமர்சனம்

0

எனை நோக்கி பாயும் தோட்டா திரை விமர்சனம்

ரேட்டிங்

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கும் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனன் கதாநாயகனை நோக்கிப் பாயும் தோட்டாவிலிருந்து ஃப்ளாஷ் பேக்கில் கதையை சொல்கிறார்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த பணக்கார வீட்டுப் பையனான ரகு (தனுஷ்), சென்னையில் ஒரு கல்லூரியில் படிக்கிறார். அங்கே படப்பிடிப்பிற்காக வரும் நடிகை லேகாவைச் (மேகா ஆகாஷ்) சந்திக்கிறார். லேகாவை பார்த்ததும் காதலில் விழுகிறார் ரகு. இருவரும் காதலிக்கிறார்கள். பெற்றோரை இழந்த லேகாவை குபேரன் வளர்கிறார். ஆனால், குபேரன் (செந்தில் வீராசாமி) தன் கட்டுப்பாட்டில் உள்ள லேகாவை சினிமாவில் நடிக்க வைத்து, பணம் சம்பாதிக்க விரும்புகிறார். லேகா குபேரன் வற்புறுத்தலின் பேரிலேயே இப்படத்தில் நடிப்பதாகவும் சொல்ல, உடனே தனுஷ் அவரை யாருக்கும் தெரியாமல் தனது சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு அழைத்து செல்கிறார். சில நாட்களுக்கு பின் லேகாவை தேடி குபேரன் தனுஷ் வீட்டுக்கு வருகிறார். ரகு குடும்பத்தினரை குபேரன் மிரட்ட, லேகா காதலரின் குடும்பத்திற்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று நினைத்து ரகுவிடம் 5 நாட்கள் கழித்து என்னை பார்க்க வா என சொல்லிவிட்டு குபேரனுடன் செல்கிறார். குபேரன் லேகாவை மும்பைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். 5 நாட்களுக்கு பின் லேகாவை பார்க்க சென்னைக்கு செல்லும் தனுஷ், அவரை தேடி அலைகிறார். எங்கு தேடியும் கிடைக்காததால் மீண்டும் சொந்த ஊருக்கு செல்கிறார். அவரிடம் இருந்து அழைப்பு வரும் என காத்திருக்கும் ரகுவுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்த சூழலில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மும்பையிலிருந்து ரகுவை அழைக்கும் லேகா, ரகுவின் சகோதரன் திரு (சசிகுமார்) ஆபத்தில் இருப்பதாகவும், உடனே மும்பைக்கு வருமாறும் கூறுகிறார். மும்பைக்கு கிளம்பிச் செல்லும் ரகுவின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடுகிறது. லேகாவுக்கும் திருவுக்கும் என்ன தொடர்பு, திரைத்துறையை சேர்ந்த குபேரனுக்கு கேங்ஸ்டர்களுடன் என்ன தொடர்பு? ரகு பிரச்சனைகளில் இருந்து எப்படி வெளியே வருகிறார்? லேகாவை காப்பாற்றினாரா? சகோதரன் திருவுக்கு என்ன நடந்தது? என்பது தான் மீதிக்கதை.

தனுஷ், வழக்கம் போல் தனது அசத்தலான நடிப்பால் கவர்கிறார். ஸ்டைலிஷ் ஹீரோவாக பக்காவாக பொருந்தியிருக்கிறார், தனுஷ். இன்ஜினீயரிங் கல்லூரி மாணவனாக, 20 வயது காதலனாக, கோபக்கார இளைஞனாக, ஆக்ஷன் ஹீரோ, செண்டிமெண்ட் காட்சிகள் என ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை நோக்கி நடிப்பு தோட்டாக்களைத் தெறிக்கவிட்டிருக்கிறார்.

மேகா ஆகாஷ் அழகாக இருக்கிறார். தனுஷ்-மேகா ஆகாஷ் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் இளவட்டங்களுக்கு விருந்து.

சசிகுமார் சர்ப்ரைஸ் கேரக்டர். திருப்புமுனையாக இவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது.

தனுஷின் அப்பாவாக வேல.ராமமூர்த்தி., செந்தில் வீராசாமி., சுனைனா உள்ளிட்ட அனைவரும் கிடைத்த கதாபாத்திரத்தை உணர்வுபூர்வமாக நடித்துள்ளனர்.

கண்களுக்கு விருந்தளிக்கும் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு.

முத்திரை பதித்த தர்புகா சிவாவின் இசை. பின்னணி இசையிலும் மிரட்டி இருக்கிறார்.

வசனங்களும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

கௌதம் வாசுதேவ் மேனன்; படம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது ஒன்று தான் காதல், ரொமான்ஸ்;. மேலும், இந்த படத்தில் ரொமான்டிக் காட்சிகளுக்கு பஞ்சமில்லை. படத்தின் முதல் பாதி, காதல், காமம் மற்றும் ரொமான்ஸ் என கலந்து செல்லும். ‘காக்க காக்க’வில் வாய்ஸ் ஓவர் ப்ளஸ். ஆனால், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வில் அநியாயத்திற்கு வாய்ஸ் ஓவர் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தோடு பார்க்கும் போது வாய்ஸ் ஓவர் கொஞ்சம் சலிப்பை வர வைக்கிறது. காதல் கதையை சொல்வதில் கைதேர்ந்த கௌதம் வாசுதேவ் மேனன்;, பல ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் தெளிவில்லா திரைக்கதையை தான்; சொல்லியிருக்கிறார். எமோஷன்களுக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு பல இருந்தும், ஒன்றைக்கூட கௌதம் வாசுதேவ் மேனன்; காட்சிப்படுத்தவில்லை என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.

மொத்தத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா” நேரா பாயவில்லை.

நம்ம பார்வையில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா” படத்துக்கு 2.5 ஸ்டார் தரலாம்.