எனிமி விமர்சனம் : கூடா நட்பு பகை உண்டாக்கும் என்பதை மெய்பித்திருக்கிறது எனிமி

0
46

எனிமி விமர்சனம் : கூடா நட்பு பகை உண்டாக்கும் என்பதை மெய்பித்திருக்கிறது எனிமி

சிறு வயதில் நண்பர்களாக இருக்கும் விஷால், ஆர்யா, விதி வசத்தால் பிரிந்து வெவ்வேறு இடங்களுக்கு செல்ல நேரிடுகிறது. விஷால் சிங்கப்பூரில் மளிகை கடை நடத்தும் தந்தை தம்பி ராமையாவிற்கு உதவியாக இருந்து அங்கே தமிழ் சமுதாய மக்களுக்கு உதவிகள் செய்து பல சேவைகளையும் புரிந்து வருகிறார். அங்கே இருக்கும் தமிழ் மக்கள் 11 பேர் கேஸ் சிலிண்டர் வெடித்து இறந்து விட, அதற்கு காரணம் ஆர்யா என்பதை விஷால் அறிகிறார். இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூற இந்தி வெளியுறவுதுறை பெண் அமைச்சர் சிங்கப்பூர் வர அவரை கொல்ல ஆர்யா சதி திட்டம் தீட்டுகிறார். அதை அறியும் விஷால் அமைச்சரை காப்பாற்றுகிறார்.அதன் பின் ஆர்யா தன் நண்பன் என்பதை அறிந்து அதிர்ச்சியாகிறார் விஷால். ஆர்யாவின் காதலி மம்தாவை பிணை கைதியாக பிடித்து போலீசில் ஆர்யாவை சரணடைய வைக்கிறார் விஷால். ஆனால் துரதிஷ்டவசமாக மம்தா ஆர்யாவின் இன்னொரு எதிரியால் கொல்லப்படுகிறார். காதலி இறந்த சேதி கேட்ட ஆர்யா, விஷால் தான் தன் காதலியை கொன்றார் என்று நினைத்து அவரை பழி வாங்க ஜெயிலில் இருந்து தப்பித்து வருகிறார். அதன் பின் விஷாலுக்கும் ஆர்யாவிற்கும் நடக்கும் சண்டையில் யார் ஜெயித்தார்கள்? என்பதே இறுதி முடிவு.

இதில் விஷால், ஆர்யா இரட்டை குழல் துப்பாக்கியாக ஒன்றாக இருந்து பின்னர் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களாக மாறுவதும், இருவருக்குள்ளும் இருக்கும் ஆக்ரோஷத்தை திறமையாக நடிப்பில் வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருக்கின்றனர்.

விஷாலின் காதலி மிருணாளினி ரவி, ஆர்யாவின் காதலி மம்தா மோகன்தாஸ் இருவரில் கொஞ்சம் வெயிட்டான ரோலில் வரும் மம்தா மனதை கவர்கிறார்.

பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன், மாளவிகா அவினாஷ், ஜான் விஜய் ஆகியோரின் இயல்பான நடிப்பு படத்திற்கு மேலும் வலு சேர்கிறது.
தமனின் இசையும், சாமின் பின்னணி இசையும் க்ரைம் த்ரில்லர் படத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக கொடுத்துள்ளனர்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பிரமிப்பையும், பிரம்மாண்டத்தையும் ஒரு சேர கொடுத்து அசத்தியுள்ளார்.

ஆனந்த்சங்கர், ஷான் கருப்பசாமி, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரின் திரைக்கதையும், ஷான் கருப்பசாமியின் வசனமும் படத்தின் விறுவிறுப்பை குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

எடிட்டர்-ரெய்மண்ட் டெரிக் க்ரஸ்டா, சண்டை-ரவி வர்மா இரண்டு கண்களாக இருந்து படத்தை பார்க்க வைத்து ரசிக்க வைத்துள்ளனர்.
நண்பர்கள் பகைவர்களானால் வெல்வது யார் என்ற கேள்விக்கு பதில் கொடுத்து. துப்பறியும் கொலைகள், க்ரைம் த்ரில்லர் பாணியில் கொடுத்திருப்பதோடு ஒருத்தரை பயமுறுத்தி மனவலிமையை இழக்கச்செய்து தற்கொலை செய்து கொல்ல தூண்டும் புதுவித ஸ்குவிட் கேம் பாணியை புகுத்தி வித்தியாசமாக திரைக்கதையமைத்து வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர்.

மொத்தத்தில் மினி ஸ்டியோஸ் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிப்பில் வெளி வந்துள்ள எனிமி கூடா நட்பு பகை உண்டாக்கும் என்பதை மெய்பித்திருக்கிறது.