எதற்கும் துணிந்தவன் விமர்சனம்: பெண்களுக்கு நடக்கும் அநீதியை எதிர்த்து வாளேடுத்த போர் வீரன்

0
142

எதற்கும் துணிந்தவன் விமர்சனம்: பெண்களுக்கு நடக்கும் அநீதியை எதிர்த்து வாளேடுத்த போர் வீரன்

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருக்கும் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ்.
இதில் சூர்யா, சத்யராஜ், வினய், பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், சூரி, இளவரசு, வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, புகழ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-ரத்னவேலு, இசை-டி.இமான், பாடல்கள்-சிவகார்த்திகேயன், யுகபாரதி, விக்னேஷ் சிவன், படத்தொகுப்பு- ரூபன், கலை இயக்கம்-ஜாக்கி, சண்டை-ராம்லட்சுமண், அன்பறிவு, ஒலி வடிவமைப்பு-சுரேன், மக்கள் தொடர்பு-யுவராஜ்.

கண்ணபிரான் (சூர்யா) ஒரு குற்றவியல் வழக்கறிஞர். தட்சிணாபுரத்தில் எல்லோருடனும் ஜாலியாக வாழ்கிறார். பெண் குழந்தைகளுக்கு மரியாதை கொடுக்க விரும்பும் குடும்பத்தில் பிறந்த கண்ணபிரான்  ஆதினியை  (பிரியங்கா மோகன்) காதலிக்கிறார். அதே ஊரில் வசிக்கும் அமைச்சரும் தொழிலதிபருமான ஒருவரின் மகன் இன்பா (வினய் ராய்) அந்த கிராமத்து உள்ள இளம் பெண்களை குறிவைத்து வேட்டையாடுகிறார்.  இருப்பினும் அவளது ஊருக்கும் கண்ணபிரானின் ஊருக்கும் இடையே மோதல்கள் இருந்ததால் அவர்களின் காதலுக்கு சில பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. கண்ணபிரானின் சாமத்தியத்தால் ஆதினி திருமணம் நடைபெறுகிறது. (அதை வெள்ளித்திரையில் காண்க). பெண்கள் தங்கள் காதலர்களுடன் நெருக்கமாக இருக்கும்போது வீடியோ எடுத்து அவர்களை பிளாக்மெயில் செய்யப்படுகிறார்கள். அவர்களது கிராமத்தில் காதலில் சிக்கும் இளம் பெண்கள், தற்கொலை மற்றும் விபத்துகளில் இறக்கின்றனர். அது பற்றி போலீசில் புகார் செய்தும் பலனில்லை. சிறுமிகளின் தற்கொலைகள் மற்றும் விபத்துக்களில் ஏற்படும்  மரணத்துக்குப் பின்னால் இருப்பது யார் என்றும் கண்டுபிடிக்க உடனே கண்ணபிரான் பிரச்சினையைத் தன் கைகளில் எடுத்துக்கொள்கிறார். இதற்கிடையில், ஆதினியின் தோழியும் இந்த சதிகாரர்களிடம் சிக்குகிறார். அவளைக்  கண்ணபிரான் காப்பாற்றும் போது அதன் பின்னணியில் இருக்கும் சதிகாரன் யார் என்பதை தெரிந்துக் கொள்கிறார். எதிரியின் சூழ்ச்சியால்; எடுக்கப்படும் ஆதினியின் வீடியோவை (கண்ணபிரான் – ஆதினி  முதலிரவு) வைத்து கண்ணபிரான் மிரட்டப்படுகிறார். கண்ணபிரான் தனது கிராமத்து பெண்களை இன்பாவிடமிருந்து எப்படி காப்பாற்றினார்? இரண்டு கிராமங்களுக்கு இடையே என்ன தொடர்பு? கண்ணபிரான்  எதிர்கொண்ட தடைகள் என்ன? கண்ணபிரான் சமூகத்தின் களைகளை எப்படி அகற்றினார், கண்ணபிரான் சிறுவனாக இருந்தபோது அவனது சகோதரிக்கு என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வழக்கமான கமர்ஷியல் பட ஜானருக்கு திரும்பியிருக்கிறார் சூர்யா. கண்ணபிரான் கதாபாத்திரத்தில் சூர்யா அற்புதமாக நடித்துள்ளார். கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு அவரது தோற்றத்தையும், உடல் மொழியையும் மாற்றிக் கொள்வது அருமை. சில முக்கியமான காட்சிகளில் தனக்கே உரிய பாணியில் அற்புதமாக நடித்துள்ளார்.

ஆதினியாக நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன் தனது கிளாமர் மற்றும் அப்பாவித்தனமான நடிப்பால் கவர்கிறார். இரண்டாம் பாதியில் ஆபாசத்திற்கு ஆளான பெண்ணாக, சூழ்நிலையை எப்படி தைரியமாக எதிர்கொள்வது என்று என்கிற காட்சியில் சிறப்பாக நடித்துள்ளார்.

கண்ணபிரானின் அப்பாவாக சத்யராஜ், அம்மாவாக சரண்யா பொன் வண்ணன், தேவதர்ஷினி சேத்தன், சுப்பு பஞ்சு சூரி, இளவரசு, வேல ராமமூர்த்தி, எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் இன்பா (வினய் ராய்). பெண்களை இழிவுபடுத்தும், பெண்களை வி.ஐ.பி.களுக்கு தூண்டில் போடும் இன்பா வேடத்தில் வினய் ராய் நடித்துள்ளார். கிரமத்து கதாபத்திரத்திற்கு அவரது தோற்றம் எடுபடவில்லை.

ரத்னவேலுவின் கேமரா ஒன்றும் அசாதாரணமானது அல்ல, ஆனால் அவர் தனது பாணியில் கிராமப்புற காட்சியை படம் பிடித்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் மிகவும் யதார்த்தமாகவும் மிக அழகாகவும் படமாக்கப்பட்டுள்ளன.

டி.இமானின் இசையில் சிவகார்த்திகேயன், யுகபாரதி, விக்னேஷ் சிவன் ஆகியோரின் பாடல்களும் பின்னணி இசையும் அருமை.

ராம் லட்சுமண்  மற்றும் அன்பறிவு சண்டை காட்சிகள் பேசப்படும்.

இரண்டு கிராமங்களுக்கு இடையே நடக்கும் சம்பவத்தில் ஆரம்பித்து பெண்கள் மீது நடக்கும் வன்மங்களைச் சொல்லும் முயற்சியை இயக்குநர் பாண்டிராஜ் கையாண்டுள்ளார். படம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றியது – வீடியோ பதிவினால் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல வலிமையானவர்கள் என்றும், பெண்கள் எந்த சூழ்நிலையிலும் துணிச்சலாக எழுந்து மன அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்பதை எமோஷனல் காட்சிகள் மூலம் கூறியுள்ளார் இயக்குனர்.

மொத்தத்தில் சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் பெண்களுக்கு நடக்கும் அநீதியை எதிர்த்து வாளேடுத்த போர் வீரன்.