“எங்கப்பாவை தப்பா பேசுறியா..?” அடிக்கப் பாய்ந்த எஸ்.எஸ்.ஆர்., மகன்!
தேசிய தலைவர் படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்தர் – ஃபார்வர்டு பிளாக் மூத்த தலைவர் வி.எஸ்.நவமணியும் மேடையில் மோதிக் கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் மறைக்கப்பட்ட வரலாறு என்ற கருவின் அடிப்படையில் தேசிய தலைவர் என்ற படம் தயாராகி உள்ளது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ், எம்.டி.சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் இப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர். இதில் தேவர் கேரக்டரில் ஜெ.எம்.பஷீர் நடித்துள்ளார். இதற்காக இஸ்லாமியரான பஷீர் 48 நாட்கள் விரதமிருந்து தேசிய தலைவர் படத்தில் நடித்தார்.
அரவிந்த் ராஜ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா வடபழனி ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நேற்று நடந்தது. இதில் ஃபார்வர்டு பிளாக் மூத்த தலைவர் வி.எஸ்.நவமணி கலந்து கொண்டார். தேசிய தலைவர் படம் எடுக்க நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்தரின் மகனான தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ஆர். கண்ணன் உதவி செய்ததாக கூறப்படுகிறது. அவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையில் பேசிய போது, படப்பிடிப்பு தளத்தில் நிறைய பிரச்சனைகள் வந்ததாகவும், அதனை மீறியும் படத்தை சிறப்பாக எடுத்ததாகவும் சொன்னார்.
தொடர்ந்து, இதில் என்னுடைய தந்தையார் எஸ்.எஸ்.ஆர். வரக்கூடிய 6 காட்சிகள் இருந்தன. அதற்காக அவரது வேடத்தில் நானே நடித்துள்ளேன். மேலும் தேவர் ஐயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பெண் செவிலியர் வேண்டாமென சொன்னார். உடனே எனது தந்தை ஆண் செவிலியரை ஏற்படுத்தி கொடுத்தார். அவருடன் நெருங்கி பழகியவர்களில் என் தந்தையாரும் ஒருவர் என எஸ்.எஸ்.ஆர். கண்ணன் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஃபார்வர்டு பிளாக் மூத்த தலைவர் வி.எஸ்.நவமணி, ”கண்ணன் மட்டுமல்ல அவரது தந்தையார் உட்பட எல்லாரும் சொல்லிக்கிட்டே இருக்காங்க. தேவர் ஐயா 1962ல் அருப்புக்கோட்டை தொகுதிக்கு போகாமலே எம்.பி.யாக ஜெயிச்சாரு. உடல் நிலை சரியில்லாம பதவி ஏற்க போகல. 6 மாசம் வரை பதவி பிரமாணம் எடுக்கப்போகாம இருக்கதால கடில்கர் என்ற காங்கிரஸ் எம்பி நாடாளுமன்றத்தில் அந்த தொகுதியை காலி பணியிடமா அறிவிக்கணும்ன்னு சொல்றாரு.
அதற்கு சபாநாயகர் ஹெ.வி.காமத், முத்துராமலிங்க தேவர் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர். அவருக்கு சட்டமெல்லாம் தெரியும். உடல் நிலை சரியில்லை என கேள்விப்பட்டேன். குழு அமைத்து அதுகுறித்து ஆய்வு பண்ணப் போகணும் என சொல்ல நீங்களே குழு அமைத்து அவருக்கு என்ன விதமான சிகிச்சை தேவை என்பதை போய் பாருங்க என மற்ற உறுப்பினர்கள் சொல்றாங்க.
அதுவரை முத்துராமலிங்க தேவர் சித்த வைத்திய சிகிச்சை தான் எடுத்துக் கொண்டிருந்தார். அவரின் தோழர் மதுரையில் உள்ள மருத்துவருடன் கலந்தாலோசித்த போது, சித்த வைத்திய சிகிச்சைக்கான சான்றிதழை நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தெரிய வருகிறது. அதனால அல்லோபதி சான்றிதழ் வேண்டுமென்றால் மருத்துவமனைக்கு வர வேண்டும் என மருத்துவர் கூறுகிறார்.
ஆனால் பிரம்மச்சாரி என்பதால் பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் தன்னை பரிசோதிக்க மாட்டார்கள் என்றால் மருத்துவமனையில் சேர்கிறேன் என முத்துராமலிங்க தேவர் கூறினார். உடனே கிறிஸ்தவ மிஷினரி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அப்போது ஏற்காட்டில் ஷூட்டிங்கில் இருந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்தரின் மருத்துவமனையில் வந்து பார்த்தார். அவ்வளவு தான் நடந்தது. பெண் செவிலியர் வேண்டாம் என சொன்னது இவர்கள் தான் ஏற்பாடு செய்து அதை பார்த்துக் கொண்டார்கள் என சொல்வதெல்லாம் முத்துராமலிங்க தேவரை சிறுமைப்படுத்தும் செயல் அல்லவா” என கூறினார்.
இதைக்கேட்டு கொதித்தெழுந்த கண்ணன், எங்க அப்பா சொல்றது பொய்யுன்னு சொல்றீயா நீ…என்ன தெரியும் உனக்கு..என சொல்லி கடும் சண்டைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கண்ணன் எழுந்து சென்று விட்டார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.