உடன்பிறப்பே விமர்சனம்
அண்ணன் சசிகுமார் அண்ணி சிஜாரோஸ் இவர்களுடன் தங்கை ஜோதிகா தன் கணவர் சமுத்திரகனியுடன் ஒன்றாக ஒற்றுமையாக ஒரே வீட்டில் வாழ்கிறார். ஆனால் சமுத்திரகனிக்கு சசிகுமாரின் அடிதடி, பஞ்சாயத்து விஷயங்கன் பிடிக்காமல் போக, அவரை கண்டிக்கவும் செய்கிறார். இதனிடையே சமுத்திரகனியின் இரட்டை குழந்தைகளில் ஒரு மகன் இறக்க, அதற்கு காரணம் சசிகுமார் என்று கோபப்பட்டு ஜோதிகாவை அழைத்துக் கொண்டு சமுத்திரகனி வீட்டை விட்டே வெளியேறுகிறார். இதனால் இரு குடும்பமும் பேச்சு வார்த்தை இல்லாமல் பகையாளியாக மாறுகின்றனர்.ஜோதிகாவிற்கு அண்ணனும், கணவனும் ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தும் முடியாமல் போகிறது. இவர்களின் வாரிசுகளால் இருவர் குடும்பமும் ஒன்றாக சேர்ந்தார்களா? ஜோதிகாவின் மகள் திருமணம் தடைபட காரணம் என்ன? அண்ணன்-தங்கை பாசம் வென்றதா? என்பதே க்ளைமேக்ஸ்.
சசிகுமார் அண்ணன் வைரவனாக அடிதடி ஆர்ப்பாட்டம் செய்யும் கதாபாத்திரம், தங்கை மாதங்கியாக ஜோதிகா கணவனையும், அண்ணனையும் அரவணைத்து செல்லும் கதாபாத்திரம் இருவரும் தங்களின் பங்கை சிறப்பாக மெறுகேற்றி நடிப்பில் பாசப்பிணைப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கண்டிப்பும், நேர்மையும் மிகுந்த வாத்தியார் சற்குணமாக சமுத்திரகனி, காமெடிக்கு சூரி, நல்லவனாக முதலில் வந்து வில்லனாக மாறும் கலையரசன், அண்ணி மரகதவள்ளியாக சிஜா ரோஸ், கலையரசனின் தந்தையாக ஆடுகளம் நரேன், சசிகுமாரின் மகனாக சித்தார்த், ஜோதிகாவின் மகளாக நிவேதிதா சதீஷ், மற்றும் வேல்ராஜ், வேலராமமூர்த்தி, தீபா, நமோ நாராயணன் ஆகியோர் கிராமத்து மக்களாக கண் முன்னே வாழ்ந்துள்ளனர்.
டி.இமானின் இசையும், பின்னணி இசையும் படத்தின் விறுவிறுப்பான காட்சிகளில் தடம் பதித்துள்ளன.
வேல்ராஜின் ஒளிப்பதிவு கிராமத்து மண் வாசனையோடு, எழில்மிகு சூழ்நிலை, பள்ளிக்கூடம், திருவிழா, சண்டைக்காட்சிகள் என்று பார்த்து பார்த்து காட்சிகளை யதார்த்தமாக படமாக்கியுள்ளார்.
ரூபனின் படத்தொகுப்பும், முஜிபூர் ரகுமானின் கலையும், சூப்பர் சுப்பராயன்,திலீப் சுப்பராயன் ஆகிய இருவரின் சண்டை காட்சிகளும் படத்தின் சிறப்பம்சம்.
கிராமத்து பாசமலர்களின் குடும்ப தகராறுகளையும், பிரச்சனைகளையும், போராட்டங்களையும் யதார்த்தமாகவும், செண்டிமெண்ட் காட்சிகள் தூக்கலாகவும், கிராமத்து பகையுடன் அதிரடி ஆக்ஷன் கலந்து நகர்த்தி சென்றிருக்கும் விதத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன்.
மொத்தத்தில் 2டி எண்டர்டெய்ண்மெண்ட் சார்பில் ஜோதிகா-சூர்யா தயாரிப்பில் உடன்பிறப்பே தொலைக்காட்சி மெகா தொடர் ஒரே படத்தில் பார்த்த அனுபவத்தை கொடுக்கும்.