இளையதளபதி விஜய்-அட்லி கூட்டணியில் இணையும் பாகுபலி கதாசிரியர்

இளையதளபதி விஜய் நடிப்பில் தற்போது ‘பைரவா’ படம் விறுவிறுப்பாகவும் வேகமாகவும் வளர்ந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து இளையதளபதி விஜய் யார் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், இளையதளபதி விஜய் மீண்டும் ‘தெறி’ படத்தின் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இந்த செய்தி தற்போது உறுதியாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் செய்தி பரவி வருகிறது. இளையதளபதி விஜய்யின் அடுத்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்தில் ‘பாகுபலி’ படத்தின் கதையாசிரியர் விஜயேந்திரர் பிரசாத் இணையவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த வருடம் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்து, வெற்றிநடை போட்ட ‘பாகுபலி’ படத்தின் கதையை உருவாக்கியவர் ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத்தான். அந்த படத்திற்கு மட்டுமில்லாது, ‘நான் ஈ’, ‘மகதீரா’, இந்தியில் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களுக்கும் கதை எழுதியுள்ளார்.

இவர் தற்போது இளையதளபதி விஜய் படத்தில் இணையப்போவதாக வெளிவந்துள்ள செய்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கெனவே, இளையதளபதி விஜய்-அட்லி கூட்டணியில் வெளிவந்த ‘தெறி’ மிகப்பெரிய சாதனைகளை முறியடித்து வெற்றி கண்டது. தற்போது இவர்களுடன் பிரம்மாண்ட படங்களின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் இணைவதாக வெளிவந்த செய்தி படத்திற்கு மேலும் பிரம்மாண்டம் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.