இயக்குனர் விக்ரமன் மனைவியை நேரில் சென்று சந்தித்த அமைச்சர்
சென்னை: திரைப்பட இயக்குனர் விக்ரமன் மனைவிக்கு, ஸ்டான்லி மற்றும் கிண்டி பல்நோக்கு அரசு மருத்துவமனைகள் டாக்டர்கள் வாயிலாக சிகிச்சை அளிக்க, மக்கள் நல்வாழ்வு துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.
உடல்நிலை சரியில்லாத எனது மனைவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என இயக்குநர் விக்ரமன் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை செய்ததால் அவரின் இடுப்பின் கீழ் செயலிழந்து போனதாகவும், தமிழ்நாடு அரசு உதவி செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தார். அவர் வேண்டுகோளை ஏற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திரைப்பட இயக்குநர் விக்ரமனின் இல்லத்திற்கு நேரடியாக சென்று அவரது துணைவியாருக்கு தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதை அரசு மருத்துவக் குழுவினருடன் நேரில் சந்தித்து, அவர்களுக்கு சிகிச்சை வழங்கும் பணிகளை மேற்கொண்டார்.
பின்னர் இயக்குநர் விக்ரமன் நிருபர்களிடம் கூறியதாவது: எனது மனைவி 5 வருடகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவரது முதுகில் தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் காரணமாக நடக்க முடியாமல் போனது. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன். அதனை பார்த்த முதல்வர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில் அமைச்சர் மற்றும் 15க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் எனது இல்லத்திற்கு வந்து, மனைவியை பரிசோதனை செய்துள்ளார்கள். இப்படி உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: உயர் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்ததில் விக்ரமன் துணைவியாருக்கு நரம்பியல் ரீதியாக (Neurology) அவரது சக்தி 3/5 என்று உள்ளது. இது ஒரு நல்ல நிலைதான். எனவே இவருக்கு பிசியோதெரபி சிகிச்சையின் மூலம், உடற் பயிற்சி செய்வதன் மூலம் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே விக்ரமனின் துணைவியார் வீட்டில் இருந்தபடியே உரிய பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, குணமடையும் வாய்ப்புகள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.