இயக்குனரை கதறவிட்ட தயாரிப்பாளர்: பஞ்சாயத்தில் ‘மழை பிடிக்காத மனிதன்’
ஒரு படத்திற்கு தயாரிப்பாளர்தான் செலவு செய்கிறார்; அவரேதான் நஷ்டம், லாபம் இரண்டையும் சந்திக்கிறார். இருப்பினும் அந்தப் படத்தின் கேப்டன் ஆப் த ஷிப் இயக்குனர்தான். எந்தப் படைப்பாக இருந்தாலும் படைப்பு மற்றும் படைப்பு சுதந்திரம் கிரியேட்டருக்கு உண்டு. அதுதான் நியாயமும்.
ஆனால் ‘மழை பிடிக்காத மனிதன்’ பட விவகாரத்தில் படைப்பு சுதந்திரம் காற்றில் பறக்கவிடப்பட்டு பஞ்சாயத்துவரை வந்துள்ளது. “சென்சார் செய்யப்பட்ட படத்தில் இயக்குனர் என்ற முறையில் என்னைக் கேட்காமல் ஒரு நிமிடம் வருவது போன்ற காட்சியை சேர்த்து படத்தை காலி செய்து விட்டனர்” என்று இயக்குநர் விஜய் மில்டன் கொதித்தெழுந்துள்ளார்.
குற்றம் நடந்தது என்ன?…
இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கிய விஜய் ஆண்டனி, இப்போ ஹீரோ. அவரை வைத்து ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் ‘ம.பி.ம’ படத்தை இயக்கியுள்ளார். கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா இணைந்து தயாரித்துள்ளனர்.
படம் தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்தே இயக்குனர், ஹீரோ, தயாரிப்பாளர்களுக்கிடையே முக்கோண ஈகோ இருந்து வந்தது. இந்த நிலையில்தான் நேற்று படம் ரிலீஸ் ஆகி, சுமாரான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர் காட்சிக்கு வந்திருந்த விஜய் மில்டன், படத்தை பார்த்துவிட்டு செம டென்ஷனில் இருந்தார்.
படம் முடிந்ததும் பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது:-
“மழை பிடிக்காத மனிதனில் நாயகன் யார், எங்கிருந்து வந்திருக்கிறார் என்கிற கேள்விகளை வைத்தே இப்படத்தை எடுத்தேன். கேள்விகளாலே இக்கதையை உருவாக்கியிருந்தேன். இப்போது, படத்தைப் பார்க்கும்போது நாயகன் யார் என்கிற ஒரு நிமிட காட்சியை படத்தின் ஆரம்பத்தில் சேர்த்திருக்கிறார்கள். இப்படி காட்சியை சேர்த்தால் பார்ப்பவர்களுக்கு என்ன சுவாரஸ்யம் இருக்கும்? தணிக்கைக்குச் சென்ற பிறகு வெளியீட்டிற்கு முன்பு இக்காட்சியை இணைத்திருக்கிறார்கள். இயக்குநரைக் கேட்காமல் இப்படிச் செய்ததற்காக என்ன சொல்வதென்றே தெரியவில்லை. படம் பார்ப்பவர்கள் தயவு செய்து, அந்த முதல் ஒரு நிமிடத்தை மறந்துவிட்டு பாருங்கள்” என்று கதறாத குறையாக வேதனையை வெளிப்படுத்தினார்.
விஜய்மில்டன் பேசிய வீடியோ தமிழ்சினிமா வட்டாரத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், அந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில், தயாரிப்பாளர் விளக்கம் அளிப்பதாக இன்று (ஜூலை 3) பகல் 12 மணிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 12 மணிக்கு நடைபெறவிருந்த நிகழ்வை, 12.10 மணிக்கு ரத்து செய்வதாக தயாரிப்பாளர் தரப்பு அறிவித்தது.
காரணம் என்ன? என்று விசாரித்தபோது, படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு இல்லை. படம் நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பட காட்சியை சேர்த்த விஷயத்தில் இயக்குனரின் பக்கமே நியாயம் இருக்கிறது. எனவே பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அவர்கள் கேட்கும் ஏடாகூடமான கேள்விகளை தவிர்ப்பதற்காகவே பிரஸ்மீட் ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இயக்குநர் விஜய் மில்டன் குற்றச்சாட்டின் அடிப்படையில் அலசினால் தேவையற்ற காட்சியை திணித்தது அந்த தயாரிப்பு நிறுவனத்தின் தூணாக இருக்கும் ஒரு தயாரிப்பாளர்தான். அதுவும் சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தில் காட்சியை சேர்த்த விவகாரம் சென்சாருக்கு தெரிந்தால்.. வில்லங்கம் வீராசாமியாகிவிடும்.
எனவே இயக்குனர் கூறும் குற்றச்காட்டுக்கு முழு பெறுப்பு அந்த தயாரிப்பாளர்தான். குற்றம் சாட்டப்படும் அந்த தயாரிப்பாளர் எல்லா காலக்கட்டத்திலும் சினிமாவை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா போல் நடந்துகொள்பவர் என்பது சினிமாக்காரர்கள் பலருக்கும் தெரிந்ததே!