இயக்குநர் மாரி செல்வராஜ் தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல மற்றவர்களுக்கு உணர்த்திவிட்டார் – இயக்குனர் ஆர்.கே.செல்வமணி புகழாரம்!
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம்(TANTIS) ஆகிய இரு சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்காக நேற்று மாமன்னன் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ள திரு.ஆர்.கே.செல்வமணி, திரு.ஆர்.வி.உதயகுமார் மற்றும் இயக்குனர்கள் திரு. லிங்குசாமி, திரு. எழில், திரு. சித்ரா லக்ஷ்மனன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்று மாமன்னன் படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டி வாழ்த்தினார்கள்.
திரு.ஆர்.கே.செல்வமணி கூறுகையில், “மாமன்னன் ஒரு மாபெரும் வெற்றி திரைப்படம். ஒரு சிறந்த படத்தை உருவாக்கிய இயக்குநர் மாரி செல்வராஜூக்கு வாழ்த்துக்கள். அடுத்ததாக இப்படி ஒரு படைப்பை தயாரித்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள். நான் படத்தை பார்த்து விட்டு அனைவருக்கும் போன் செய்து வாழ்த்து கூறினேன். வடிவேலுவை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம், மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். இயக்குநர் தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல மென்னையாக மற்றவர்களுக்கு உணர்த்திவிட்டார். மாரி செல்வராஜை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை, அவரது உழைப்பு அபாரமானது. உதயநிதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அவரது பல படங்களை பார்த்து ரசித்திருப்போம், ஆனால் இந்தப் படம் பார்த்த பிறகு எனக்கு ஒரு பாதிப்பை மனதில் ஏற்படுத்தி விட்டது. தமிழ் சினிமாவிற்கு சிறந்த படத்தை தந்த படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.”
மாமன்னன் படக்குழு சார்பாக திரு. உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் திரு.மாரி செல்வராஜ் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.