இயக்குநர் சேரனால் உந்தப்பட்டேன்: மனம் திறந்த பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்

0
8

இயக்குநர் சேரனால் உந்தப்பட்டேன்: மனம் திறந்த ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்

சேரன் என்ற இயக்குநரால்தான் நான் உந்தப்பட்டேன் என்று ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நேரம்’. இந்தத் திரைப்படத்தை மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கினார். இவரது இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமா மட்டுமல்லாது அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் திரைப்படத்தில் நிவின் பவுலி, மடோனா செபஸ்டின், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்தனர்.

இந்தப் படம் வெளிவந்தபோதே சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் சாயல் இருப்பதாக சொல்லப்பட்டது. இப்போது அல்போன்ஸ் புத்திரன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு ரசிகர், இது தொடர்பாக, ” ‘பிரேமம்’ கதையை எழுதும்போது ‘ஆட்டோகிராஃப்’ தாக்கம் இருந்ததா?” என்று கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு அல்போன்ஸ் புத்திரன் பதில் கொடுத்துள்ளார். சமீப காலமாக, ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்து வரும் அவர், இந்தக் கேள்விக்கு அளித்த பதிலில், “‘ஆட்டோகிராஃப்’ படம் வெளியான சமயத்தில் அதனை பல முறை பார்த்துள்ளேன். அது பல வருடங்களுக்கு முன்பு. அந்தப் படம் பார்த்தபோது சேரன் என்ற இயக்குநரால்தான் நான் ஊக்கப்படுத்தப்பட்டேன்.

ஆனால் ‘பிரேமம்’ எடுக்கும்போது ஆட்டோகிராஃபை போல இருக்கக் கூடாது என்று நினைத்து எடுத்தேன். காரணம், ‘ஆட்டோகிராஃப்’ அழகான படம். அந்த அழகான படம் தொடர்பாக எதையும் நான் தொட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். ஆட்டோகிராஃப் போல் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று சேரன் அக்கறையுடன் எடுத்த சிரமம்தான் எனக்கான பாதிப்பே தவிர, அந்தப் படத்தின் தாக்கம் எனது படம் அல்ல”.

இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.