இந்தி படத்தில் தனுஷுக்கு ஜோடி- மனம் திறந்த சாரா அலிகான்

0

இந்தி படத்தில் தனுஷுக்கு ஜோடி- மனம் திறந்த சாரா அலிகான்

தனுஷுடன் நடிக்க ஏன் சம்மதித்தேன் என்று இந்தி சினிமாவின் இளம் ஹீரோயின் சாரா அலிகான் தெரிவித்துள்ளார்.

இந்தியில் ‘தனு வெட்ஸ் மனு’ உட்பட சில படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய், தனுஷ் நடித்த ரான்ஜ்னா என்ற படத்தையும் இயக்கி இருந்தார்.இதையடுத்து தனுஷ் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாயின.

இந்தப் படத்தில் சாரா அலிகான், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார் என்றும் அக்‌ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்றும் காதல் கதையை கொண்ட படமான இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்தப் படத்துக்காக, தனுஷ், அக்‌ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோர் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளன. படத்துக்கு ஏ.அர்.ரகுமான் இசை அமைக்கிறார். பூஷன்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிமன்ஷு சர்மா கதை எழுதியுள்ளார். ஷூட்டிங் மார்ச் 1 ஆம் தேதி தொடங்குகிறது. படத்துக்கு, அட்ரங்கி ரே என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இதில் நடிக்க அக்‌ஷய்குமார் ரூ.120 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகக் கூறப்பட்டது. பாலிவுட்டில் அக்‌ஷய்குமார் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் தொடர்ந்து வசூலை வாரிக் குவித்து வருகின்றன.

அவரது படங்களின் டிஜிட்டல் மற்றும் சேனல் உரிமங்களை பெறவும் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் அவரது சம்பளம் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்தப் படத்தில், சீனியர் ஹீரோக்களான அக்‌ஷய் குமார், தனுஷுடன் நடிப்பது ஏன் என்று அவர் விளக்கம் அளித்தார். அவர் கூறும்போது, இந்த படத்தின் ஸ்கிரிப்டை படித்தபோது எனக்கு தயக்கமாக இருந்தது. அழுத்தமான கேரக்டர். என்னால் அப்படி நடிக்க முடியுமா? என்று சந்தேகம் இருந்தது. பிறகு இது சவால்தான். செய்வோம் என்று சம்மதித்தேன்.

நான் நடித்து 2 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகிறது. என்னுடன் நடிக்கும் அக்‌ஷய்குமார், நான் ரசிக்கும் நடிகர். தனுஷ், சிறந்த நடிகர். இந்தியில் அதிகம் பரிட்சயம் இல்லாத நடிகர். இருவரும் எனக்கு சீனியர்கள். வெவ்வேறு நடிகர்களுடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன். கதை உள்ளிட்ட விஷயங்களில் நான் தலையிடுவதில்லை. அதை இயக்குனர்கள் சரியாக செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.