இந்திய மண்ணில் இருக்கும் ஒரு புரட்சி, இந்திய மண்ணில் இருக்கும் ஒரு கலாச்சாரம் அதுதான் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (RRR) – இயக்குநர் ராஜமெளலி
ராஜமெளலி இயக்கி உள்ள படம் (RRR) ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. லைகா ப்ரொடக்ஷன்ஸ், டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ஜனவரி 7-ம் தேதி வெளியாகவுள்ளது.
ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. புஷ்பா படத்திற்கு பிறகு மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் சினிமா நிகழ்ச்சி இது தான். மிக பிரம்மாண்டமாக தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் டிசம்பர் 27 ம் தேதியும், ஐதராபாத்தில் ஜனவரி 30 ம் தேதியும் நடத்தப்பட உள்ளதாக லைகா அறிவித்திருந்தது. ஆனால் ஒமைக்ரைன் பரவல் அதிகரிப்பதன் காரணமாக ஐதராபாத்தில் நடத்தப்பட இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று சென்னை வர்த்தக மையத்தில் ஆர்ஆர்ஆர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஆர்ஆர்ஆர் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் சென்னையிலும் மிக பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் ராஜமெளலி, ராம்சரண், ஜுனியர் என்டிஆர், உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, மதன் கார்க்கி, ஆர்.பி.செளத்ரி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். ஆடல், பாடலுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
டான்ஸ் மாஸ்டர் சாண்டி தனது குழுவினருடன் சேர்ந்து ஆர்ஆர்ஆர் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்ட நாட்டு நாட்டு பாடலுக்கு அதே போல் உடையணிந்து, அதே ஸ்டெப்களை போட்டு நடனமாடி அனைவரையும் அசர வைத்தார். இதனை ராஜமெளலி உள்ளிட்டோர் மிகவும் ரசித்தனர்.
விழாவில் ராஜமௌலி பேசியதாவது:- “தமிழ் தாய்க்கு வணக்கம். சென்னை மாநகருக்கு வணக்கம். 13 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு முன்தொகை கொடுத்தால் பல ஆண்டுகள் இந்த படத்தை அவருக்கு கொடுத்துள்ளேன். இப்படத்தின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு நன்றி. எனக்கு 50 வயது ஆகிறது.
இப்போதும் என் அப்பா அவர் மேல் என்னை வைத்து உலகத்தை சுற்றி காட்டுகிறார். இந்திய மண்ணில் இருக்கும் ஒரு புரட்சி, இந்திய மண்ணில் இருக்கும் ஒரு கலாச்சாரம் அதுதான் இப்படம். இந்த மாதிரி படம் பண்ண இருவர் வேண்டும். நல்ல நண்பர்களாக சகோதரர்களாக அப்படி பட்ட இருவர்தான் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண்.” என்றார்.

