ஆரம்பமானது ஆதலினால் காதல் செய்வீர் வெப் சீரிஸ்
திரைப்படங்களுக்கு இணையாக தற்போது வெப் சீரிஸ்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்தவகையில் ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ மற்றும் ‘மோஷன் கன்டென்ட் குரூப்’ இணைந்து வழங்கும் வெப் சீரிஸ் தான் ‘ஆதலினால் காதல் செய்வீர்’.
120 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸின் முதல் 5 தொடர்கள் ஆக-23 முதல் விகடன் டெலிவிஸ்டாஸ் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம், தாங்கள் தயாரித்து பெரும்பான்மையான பெண் பார்வையாளர்களை கவர்ந்த ‘வல்லமை தாராயோ’ வெப் சீரிஸின் வெற்றியை தொடர்ந்து, முற்றிலும் புதிய கதையம்சத்துடன் குறிப்பாக 2K கிட்ஸ் மற்றும் அவர்களது பொழுதுபோக்கு அம்சங்களை குறிவைத்து இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ளது.ஆறு பிளாட்டுகளில் அருகருகே வசிக்கும் நண்பர்கள் தங்களது வாழ்க்கையில் சந்திக்கும் ஏற்ற இறக்கங்கள், பெற்றோருடான நிலைப்பாடு, நட்பு, காதல் சிக்கல்கள் மற்றும் தங்களது பலநாள் கனவுகளை நிறைவேற்ற அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என எல்லாம் கலந்த ஒரு கலவையான வெப் சீரிஸாக இது உருவாகியுள்ளது.
ராஜீவ் கே.பிரசாத் இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸின் திரைக்கதையை வே.கி.அமிர்தராஜ் மற்றும் ஜோ ஜார்ஜ் இருவரும் எழுதியுள்ளனர். இந்த டிஜிட்டல் டெய்லி சீரிஸின் டைட்டில் பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..