ஆபாச குப்பைகளை அள்ளி தெருவில் போட்டது போதும், சற்றே விலகி நில்லுங்கள் ராம்கோபால் வர்மா! சினிமாவை இளைஞர்கள் பார்த்துக் கொள்வார்கள்!! மூத்த பத்திரிகையாளர் மீரான்முகமது முகநூல் பதிவு

0
61

ஆபாச குப்பைகளை அள்ளி தெருவில் போட்டது போதும், சற்றே விலகி நில்லுங்கள் ராம்கோபால் வர்மா! சினிமாவை இளைஞர்கள் பார்த்துக் கொள்வார்கள்!!

மூத்த பத்திரிகையாளர் மீரான்முகமது முகநூல் பதிவு

ஒரு காலத்தில் ஓரளவுக்கு தரமான கமர்ஷியல் படங்கள் எடுத்தவர்தான் ராம்கோபால் வர்மா. வயதானால் புத்தி மழுங்கும் என்று கிராமத்தில் பழமொழி சொல்வார்கள். அது ராம்கோபால் வர்மாவுக்கு பொருந்தும்.

இன்றைய இளம் தலைமுறைகளின் வருகை, அவர்களின் புதிய சிந்தனை, பிரமாண்ட பட்ஜெட்கள், உலக அளாவிய வெளியீடுகள், ஆயிரம்கோடி வசூல் என சினிமா மாறிவிட்ட பிறகும், ராம்கோபால் மாதிரியான பழசுகள் என்ன செய்வதென்று தெரியாமல் ஆபாச குப்பைகளை அள்ளி தெருவில் போட்டு தங்களை விளம்பர வெளிச்சத்தில் நிறுத்திக் கொள்கிறார்கள்.

தாய், தங்கை, மனைவி, மகள் என்று பெண்களோடு வாழ்ந்த ஒருவன், வயதான காலத்தில் பேத்தி வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தருவது எந்த மாதிரியான மனநிலையோ… அதுமாதிரியானதுதான் ராம்கோபால் வர்மா ஆபாச படங்களை எடுப்பதும்.

சமீபகாலமாக ஆபாச படங்களை குறைந்த பட்ஜெட்டில் எடுத்து அதனை சொந்த ஓடிடியில் வெளியிட்டோ, அல்லது நல்ல விலைக்கு விற்றோ பணம் சம்பாதிக்கும் கீழ்த்தரமான வேலையில் இறங்கி இருக்கிறார்.

தற்போது அவர் இறக்கி இருக்கும் புது சரக்கு ‘டேன்ஞ்சரஸ்’ என்ற படம். இந்த படத்தை இந்தியில் இயக்கி இருக்கிறார். தெலுங்கில் ‘மா இஷ்டம்’ என்ற பெயரில் வெளியிடுகிறார். மாட்டக் கடிச்சி ஆட்ட கடிச்சி மனுஷன கடிச்ச கதையாய் இதனை தமிழில் ‘காதல் காதல்தான்’ என்ற பெயரில் வெளியிடுகிறார்.

ஆண்களின் வக்கிர பாலியல் துன்புறுத்தலால் வெறுப்புற்ற இரு பெண்கள் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு ஒரே பாலுணர்வு (லெஸ்பியன்) பெண்களாக மாறுகிறார்கள், அதில் அவர்களுக்கு பிரச்சினை வருகிறபோது கொலை, ரத்தம் என்று அவர்கள் வாழ்க்கை மாறுகிறது. இதுதான் படத்தின் டிரைய்லர் மூலம் தெரிய வருகிற கதை.
நீலப் படங்களில் ‘டபுள் எக்ஸ்’ என்ற வகை படங்கள் உண்டு. அதனை அப்படியே எடுத்து அதற்கு தணிக்கை சான்றிதழும் வாங்கியிருக்கிறார்கள். கேட்டால் “லெஸ்பியன் உறவை அரசே சட்டபூர்வமாக்கி இருக்கிறது, அதைத்தான் படமாக எடுத்திருக்கிறேன்” என்கிறேன் வர்மா. கணவன் மனைவி உறவுகூடத்தான் சட்டமாக இருக்கிறது. அதற்காக கணவன், மனைவி உறவை அப்படியே படமாக எடுப்பீர்களா வர்மா?.

லெஸ்பியன் உறவு என்பது பாலியல் ரீதியான ஒரு ஹேர்மோன் குறைபாடு. அதை அனுமதித்து வாழ்கிற முற்போக்கான நிலையை நாம் எட்டியிருக்கிறோம். அதன் பின்னணி, சமூக பார்வை குறித்து ‘ஃபயர்’ மாதிரியான படங்கள் வந்திருக்கிறது. அவைகள் லெஸ்பியன்களின் உள்ளங்களை பேசியது. வர்மா பேசி இருப்பது அவர்களது உடல்களை …

இந்தப் படம் பற்றி பதிவிட்டு தேவையில்லாமல் அதற்கொரு விளம்பரம் தர வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் வருமுன் எச்சரிக்க வேண்டிய கடமையும் இருப்பதால் இந்த பதிவை வெளியிடுகிறேன்.

வர்மா… நீங்கள் சினிமாவுக்கு செய்தது போதும், சற்றே விலகி நில்லுங்கள். வருங்கால சினிமாவை இளைஞர்கள் பார்த்துக் கொள்வார்கள். உங்கள் பெட்டியை நிரப்ப பெண்களின் உடலையும், உணர்வையும் பயன்படுத்தாதீர்கள்.

Source: மீரான்முகமது முகநூல் பதிவு

நன்றி: மீரான்முகமது