அரை நூற்றாண்டுகளாய் இந்திய சினிமாவை மயக்கிய ‘காந்தக்குரல்’ எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
சென்னை, செப். 25
தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களைப் பாடியவர். 12 மணி நேரத்தில் கன்னடத்தில் 21 பாடல்களைப் பாடியவர். 6 மணி நேரத்தில் இந்தியில் 16 பாடல்களைப் பாடியவர். இந்திய மொழிகளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி உலக சாதனை படைத்தவர்.
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் ராசிக்கரங்களால் அடிமைப்பெண் படம் மூலம் 1969ம் ஆண்டில் வெள்ளித் திரைக்கு பாடகராக அறிமுகமானவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் அதாவது அரை நூற்றாண்டு காலமாய் இந்திய சினிமாவை இசையால் மயக்கிய ‘காந்தக் குரலோன்’ எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
இந்திய மொழிகளில் சுமார் 45 ஆயிரம் பாடல்களைப் பாடி உலக கின்னஸ் சாதனை படைத்தவர். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் என 3 தலைமுறை இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி கலை வாழ்க்கையில் உச்சந்தொட்டவர்.
ஒட்டுமொத்த தேசத்தின் குரலாய் ஒலித்தவர். ‘மண்ணில் இந்த காதலன்றி’… பாடலை மூச்சு விடாமல் பாடி பிரமிக்க வைத்த சாதனையாளர்.
மத்திய அரசின் உயர்ந்த ‘பத்மபூஷண்’ விருது வரை உயர்ந்த தன்னிகரற்ற பன்முகத் திறமைசாலி. எஸ்.பி. பாலசுப்பிரமணியம். ‘என்ஜினியரிங்’ பட்டதாரி ஆனால் கலை வாழ்வில் காலடி வைத்தவர், வாசமும் இசை, சுவாசமும் இசை என்று அரை நூற்றாண்டுகளாய் இசையோடு ஐக்கியமானவர்.
பாலசுப்பிரமணியம், எஸ். பி. சம்பமூர்த்தி சகுந்தலம்மா தம்பதிய ருக்கு மகனாக கொணடம்பேட்டை, ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் மாவட்ட த்தில் 1946, ஜூன் 4ந்தேதி பிறந்தார். தந்தை ஹரிஹத கலைஞர். இவர் உடன் பிறந்தவர்கள் 2 சகோதரர்கள், 5 சகோதரிகள். இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா இளைய தங்கைகள். சைலஜா 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.
1966ல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயி ரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனை கள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
பன்முகக் கலைஞன்
திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர், பின்னணிக் குரல் தருபவர் (டப்பிங்) என பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷண் விருதும் வழங்கியது. இவருக்கு 2016ம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.45 ஆயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார் எஸ்.பி.பி. 6 முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார்.
எஸ்.பி.பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும்
சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே.
பிலிம்பேர் விருதினை ஒரு முறையும், பிலிம்பேர் விருது (தெற்கு) 3 முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர், தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும், ஆந்திர அரசின் நந்தி விருதினையும் பெற்றார். இவர் 1981ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.
எந்த பாடகரும் செய்யாத சாதனை களை எஸ். பி. பி. இந்திய திரையிசை யில் செய்திருக்கிறார். இவர் 1981ம் ஆண்டு பிப்ரவரி 8ந் தேதி கர்நாடகம், பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார்.
மேலும் தமிழில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும். 45 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ் பி பாலசுப்ரமணியம் உலகின் அதிக பாடல்கள் பாடிய பாடகர் என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
ஒட்டுமொத்த தேசத்தின் குரல்
ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்பி பாலசுப்ரமணியம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். இதுவரை எஸ் பி பாலசுப்ரமணியம் பெற்றுள்ள 6 தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது எஸ்.பி.பியின் பன்மொழி திறமைக்கு சான்று.
ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டவர்
ஆரம்பத்தில் மோசமான தமிழ் உச்சரிப்புக்காக புறந்தள்ளப்பட்ட எஸ்.பி.பி, பின்ன எம்எஸ்வி-யின் ஆலோசனைக்கு இணங்க ஓராண்டு பயிற்சி பெற்று தமிழ் சினிமாவில் பாடும் வாய்ப்பை பெற்றார். அதன்பின் கிடைத்த முதல் வாய்ப்பில் இருந்து (எம்.ஜி.ஆரின் ‘அடிமைப்பெண்’ படத்தில் ‘ஆயிரம் நிலவே வா….’) இன்று வரை 51 ஆண்டுகளாக எல்லா மொழிகளிலும் சரியான உச்சரிப்புடன் பாடும் பாடகர் என்ற சிறப்பைப் பெற்றவர்.
மெல்லிசை மன்னர்
எம்.எஸ் விஸ்வநாதன் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் அறிமுகமான எஸ்.பி பாலசுப்ரமணியம், இசை ஞானி இளையராஜா இசையமைப்பாளராக வலம் வந்த நேரத்திலும் உச்சத்தில் இருந்து வந்தார். பின்னர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தலைமுறையிலும் தன்னை தக்க வைத்துக்கொண்டு, இன்றைய இளம் இசையமைப்பாளர் அனிருத் வரை பல தலைமுறை இசையமைப்பாளரை கடந்தும் தனது தன்னிகரில்லாத கம்பீரக் குரலால் ரசிகர்களை வசீகரித்தவர்.
நடிகராக பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் எஸ். பி. பாலசுப்ரமணியம். புதிய முயற்சிகளை முயன்று பார்ப்பதில் எப்பொழுதும் ஆர்வம் காட்டியவர். வசந்த் இயக்கத்தில் ‘‘கேளடி கண்மணி’’ திரைப்படத்தில் ‘‘மண்ணில் இந்த காதலன்றி’’ பாடலையும், ‘‘அமர்க்களம்’’ திரைப்படத்தில் ‘‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’’ பாடலையும் மூச்சுவிடாமல் பாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.
அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக தமிழ் சினிமாவை ஆக்கிரமித்த காந்தக் குரல் எஸ்.பி.பி. உடையது. * ஏவிஎம்மின் மின்சாரக்கனவு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தங்கத் தாரகை மகளே’ என்கிற பாடலுக்காக அவர் தேசிய விருதைப் பெற்றார். * கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டவர். இவருடைய ஆர்வத்தைப் பார்த்து சச்சின் டெண்டுல்கர் அவருடைய கையெழுத்திட்ட பேட்டை பரிசாக எஸ்.பி.பிக்கு அளித்திருக்கிறார்.
* ஓவியங்கள் வரைவதில் மிகுந்த பிரியம் உண்டு. அதே போன்று நன்றாக புல்லாங்குழல் வாசிப்பார். வெவ்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.
இளம் வயதில் தெலுங்கு இசை நிறுவனம் ஒன்று நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். அந்தப் பரிசுதான் பாடகராக வேண்டும் என்கிற ஆர்வத்தை அவருக்குள் விதைத்தது.
இவருடைய தாய்மொழி தெலுங்கு. தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரின் இசையில் ‘ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமண்ணா’ என்கிற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலைப் பாடினார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
* 1969ம் ஆண்டு சாந்தி நிலையம் படத்திற்கு ‘ இயற்கை எனும் இளையகன்னி’ என்கிற பாடலைப் பாடி தமிழில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார் ஆனால் ‘சாந்தி நிலையம்’ படம் வெளிவருவதற்கு முன்னரே ‘அடிமைப்பெண்’ படத்தில் ‘ஆயிரம் நிலவே வா’ என்கிற பாடல் மூலம் இவரது குரல் தமிழ் உலகிற்கு ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.