அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா?- விஜய் சொன்ன பதில் என்ன?

0
72

அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா?- விஜய் சொன்ன பதில் என்ன?

கடந்த பல ஆண்டுகளாகவே நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தனது அரசியல் வருகை குறித்து விஜய் மனம் திறந்துள்ளார்.

விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை மறுதினம் வெளியாகவுள்ளது. பீஸ்ட் வெளியீட்டை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு திரையங்குகளில் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. ஒருபுறம் டிக்கெட் புக்கிங் மறுபுறம் பேனர், நோட்டீஸ் என காணும் இடம் எங்கும் ஒரே பீஸ்ட் மயமாக உள்ளது.

பீஸ்ட் படத்துக்கு ஆடியோ ரிலீஸ் விழா இல்லாததால் விஜய்யின் பேச்சைக் காணக் காத்திருந்த அவரது ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே அவர்களைக் குளிர்விக்கும் விதமாக அமைந்தது விஜய்யின் பேட்டி பற்றிய அறிவிப்பு. பீஸ்ட் வெளியீட்டையொட்டி, சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்க விஜய் சம்மதித்திருந்தார். அந்த வகையில் ஞாயிற்றுக் கிழமையான நேற்று விஜய்யின் பேட்டி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன், நடிகர் விஜய்யைப் பேட்டி எடுத்திருந்தார் .

இந்தப் பேட்டியில் நடிகர் விஜய் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். குறிப்பாக, ‘தளபதி தலைவனாக ஆவாரா; அதில் ஆர்வம் இருக்கிறதா?’ எனும் தொனியில் கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த நடிகர் விஜய், ‘இளைய தளபதி’யாக இருந்த தன்னை, ‘தளபதி’யாக மாற்றி இவ்வளவு தூரம் கொண்டுவந்திருப்பது மக்கள்தாம் எனத் தெரிவித்தார். மேலும், தளபதியாக இருக்கவேண்டுமா அல்லது தலைவனாக மாறவேண்டுமா என அவர்களும் காலமும்தான் முடிவு செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த நடிகர் விஜய், மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் போட்டியிட்டதாகவும், தனது புகைப்படத்தைத் தேர்தலில் பயன்படுத்திக்கொள்ளலாமா என அவர்கள் கேட்ட நிலையில் அவர்களுக்கு தான் சம்மதம் அளித்ததாகவும் சுட்டிக் காட்டினார். அத்துடன் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு தனது வாழ்த்துகளையும் விஜய் தெரிவித்துள்ளார்.