அயோக்யா திரை விமர்சனம் ரேட்டிங் 3/5

0

அயோக்யா திரை விமர்சனம்  ரேட்டிங் 3/5

அனாதையான விஷால் போலீசானால் அடாவடியாக பணம் சம்பாதிக்கலாம் என்ற மனநிலையில் வளர்கிறார். படிப்பு வரவில்லை என்றாலும், கோல்மால் செய்து போலீசில் சேர்கிறார். எந்த இடத்தில் வேலை செய்தாலும் பணம் ஒன்றே குறிக்கோலாக கொண்டு எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். விஷாலின் குணத்தை நன்கு அறிந்த அரசியல்வாதி சென்னையில் ரவுடி பார்த்திபன் இருக்கும் இடத்திற்கு சாதகமாக, வேலை மாற்றம் செய்து அனுப்புகிறார். ஆரம்பம் முதலே பார்த்திபனும்-விஷாலும் அண்ணன் தம்பியாக பழக, பார்த்திபனின் தொழிலுக்கு உறுதுணையாகவும், உடந்தையாகவும் செயல்பட்டு பணத்தில் திளைக்கிறார் விஷால். இந்நிலையில் ராஷிகன்னாவை பார்க்கும் விஷால் காதலில் விழ எப்பொழுதும் போல் காதல் கை கூடுகிறது. இந்த நேரத்தில் பார்த்திபனின் தம்பிகள் நால்வர் ஒரு பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கின்றனர். அந்த வீடியோ ஆதாரத்தை கொலை செய்யப்பட்ட பெண்ணின் அக்கா பூஜா தேவரியா கையில் கிடைக்கிறது. பூஜாவை கொல்ல பார்த்திபன் அடியாட்களை அனுப்புகிறார்.ஆள் மாறாட்ட குளறுபடியால் பூஜா என்று நினைத்து பார்த்திபனின் அடியாட்கள் ராஷி கன்னாவை கடத்தி கொல்ல பார்க்க இதனால் விஷாலுக்கும் பார்த்திபனுக்கும் பகை ஏற்படுகிறது. ராஷி கன்னா தப்பித்தாலும், பூஜாவை காப்பாற்றும்படி விஷாலிடம் தன் பிறந்த நாள் பரிசாக கேட்கிறார். பூஜாவை மீட்டு அவரிடமிருக்கும் வீடியோ ஆதரத்தை வாங்குகிறார் விஷால். அந்த வீடியோ ஆதரத்தை கேட்டு பார்த்திபன் விஷாலுக்கு மிரட்டல் விடுகிறார். இறுதியில் பணத்திற்காக விஷால் ஆதாரத்தை விலை பேசினாரா? கொடிய குற்றம் செய்த பார்த்திபன் தம்பிகளை கண்டுபிடித்து கோர்ட்டில் ஒப்படைத்தாரா? வீடியோ ஆதாரம் என்ன ஆனது? குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? என்பதே படத்தின் திருப்பங்கள் நிறைந்த உச்சகட்ட க்ளைமேக்ஸ் காட்சி.
போலீஸ் கர்;;ணனாக விஷால் பெயரளவில் மட்டுமே அதிகாரியாக இருந்து கொண்டு செய்யும் அடாவடி செயல்கள், பொய், பித்தலாட்டம், மிரட்டி பணம் பறிப்பது, அநியாயம் செய்வது, குற்றங்களுக்கு துணை போவது என்று முதல் பாதியில் கெட்டவனாகவும், இரண்டாம் பாதியில் நல்லவனாகவும் மாறி வசனத்தாலும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் அனைவரையும் தெறிக்க விட்டு கதி கலங்க வைத்து விடுகிறார். அவரின் கோபத்தை வெளிப்படுத்தும் விதம் திமிராகவும், மிடுக்காகவும் செய்து அசத்தி விடுகிறார். வெல்டன்.
போலீஸ் காதராக கே.எஸ்.ரவிக்குமார் விஷாலின் தப்பான செயலை தட்டிக் கேட்பவராகவும், அதே சமயம் விஷாலின் திருந்திய மனநிலையை பார்த்து சல்யூட் அடித்து ஆரவாரம் செய்வதாகட்டும் படம் முழுவதும் இவரின் பங்களிப்பு முக்கியமானது.
ரவுடி காளிராஜனாக பார்த்திபன், வார்த்தைக்கு வார்த்தை விஷாலுக்கு பதிலடி கொடுத்தும், சவால் விடுத்தும் அசால்ட் வில்லனாக தடதடக்க வைக்கிறார்.
காதலி சிந்துவாக ராஷிகன்னா படத்தின் திருப்புமுனைக்கு பெரிதும் உதவுகிறார்.
மற்றும் ராதாரவி, சச்சு, ஆனந்த்ராஜ், யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர்,சந்தானபாரதி, பவித்ரா லோகேஷ், ஆடுகளம் நரேன், ஆர்என்ஆர் மனோகர், வேலராமமூர்;த்தி, பூஜா தேவரியா, தேவதர்ஷினி, சானா கான் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு பலம்.
சாம்.சி..எஸ் இசையில் பாடல்களும், இசையும் அதிர வைக்கிறது.
வி.ஐ.கார்த்திக்கின் ஒளிப்பதிவு அனைத்து காட்சிகளையும் ஒரு சேர உணர்வுபூர்வமாக கொடுத்து ஆக்ஷன் களத்திலும் சிறப்பான பங்களிப்புடன் படத்தின் வெற்றிக்கு துணை போகிறார்.
ராம் லட்சுமணின் அதிரடி கலந்த சண்டைக்காட்சிகள், ரூபனின் கச்சிதமான எடிட்டிங் படத்தின் விறுவிறுப்புக்கு உத்தரவாதம்.
எழுத்து, திரைக்கதை, வசனம், இயக்கம்-வெங்கட் மோகன். 2015ல் ஜீனியர் என்டிஆர்,காஜல் அகர்வால், பிரகாஷ்ராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படமான டெம்பர் தெலுங்கு படத்தின் ரீமேக் படம் தான் அயோக்யா. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை அதற்கு தகுந்த தண்டனை எதுவும் நடைமுறை படுத்தாமல் இன்றளவும் குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு இந்த படமே சிறந்த சாட்சி. படத்தில் நடக்கும் சம்பவங்கள், சண்டைக்காட்சிகள், வசனங்கள், பின்னணி இசை, கதாபாத்திரங்கள் அனைத்தும் கச்சிதமாக அமைந்து இரண்டாம் பாதியில் இவை அனைத்தும் ஒருங்கிணைத்து திரைக்கதை அமைத்திருக்கும் விதமும், இறுதிக் காட்சியில் ஆதாரங்கள் அழிந்தாலும் ஆதாரத்தை உருவாக்கி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கும் அந்த ஒரு காட்சியே படத்தின் வெற்றிக்கு அத்தாட்சி. பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு உடனே தூக்கு தண்டனை கொடுத்து தண்டிக்க வேண்டும் என்கிற மெசேஜை ஆணித்தரமாக அசத்தலாக கொடுத்து கைதட்டல் பெறுகிறார் இயக்குனர் வெங்கட் மோகன்.

மொத்தத்தில் அயோக்யா மோசமானவன் இல்லை காவல் துறையிலேயே விசித்திரமானவன்.

நம்ம பார்வையில் ‘அயோக்யா” படத்துக்கு 3 ஸ்டார் தரலாம்.