அசுரன் 100 ஆம் நாள் கொண்டாட்டத்தில் வெற்றிமாறனுக்கு நன்றி சொன்ன தனுஷ்

0

அசுரன் 100 ஆம் நாள் கொண்டாட்டத்தில் வெற்றிமாறனுக்கு நன்றி சொன்ன தனுஷ்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையை பெற்றுள்ள அசுரன் படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம் , அம்மு அபிராமி , கென் கருணாஸ் ,ஜிவி.பிரகாஷ் , ராமர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் தனுஷ் பேசியதாவது, “இது மறக்க முடியாத நிகழ்ச்சி. இது நன்றி சொல்கின்ற மேடை. தாணு சாருக்கு என் நன்றி. வெற்றிமாறனுக்கும் எனக்கும் அவர் கொடுத்த சுதந்திரம் தான் அசுரன் உருவெடுத்ததிற்கு காரணம். ஜிவிக்கு என்னுடைய நன்றி. இந்தபடத்தின் பின்னணி இசையில் தான் படத்தின் 25% சதவிகிதம் இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் பிரதி தயாராகும் போது லண்டனில் இருந்தேன். இந்தப் படம் என்னவாக வந்துள்ளது என்பதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் ஃப்ரேமிலேயே ‘வா அசுரா வா’ என்ற இசை வரும்போது, ஜிவ்வென்று இருந்தது.

பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன் என்றார். திரையில் அப்படிப்பட்ட காட்சிகள் வரும்போது, இப்படி கஷ்டப்படுவது ஆனந்தமாகத்தான் இருக்கும். அவரோடு பணிபுரியும்போது ஹாலிவுட் படங்களுக்கு நிகரான காட்சிகள் வரும் எனத் தெரியும். கடைசியில்தான் அவரைத் தொடர்பு கொண்டோம். உடனே ஒப்புக் கொண்டு பண்ணிக் கொடுத்தார். வேல்ராஜ் அவர்களின் உழைப்பு மிகவும் பெரிது. என் உடன் சேர்ந்த நடித்த எல்லா நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி.

‘அது ஒரு கனாக்காலம்’ படத்தின் படப்பிடிப்பில் அம்மாவை நினைத்து எழுந்து கதறி அழுதுவது மாதிரி ஒரு காட்சி எடுத்தார்கள். அந்தப் படத்தில் நடிக்கும்போது 20 வயதுதான் என்பதால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரியாது. அப்போது பாலு மகேந்திரா சாரிடம் ‘வெற்றி சாரை ஒரு முறை பண்ணச் சொல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றேன்.

பொதுவாகவே ஒரு காட்சியை உதவி இயக்குநரை நடித்துக் காட்டச் சொன்னால் உடனே அதிர்ச்சியாவார்கள். அதை ஒரு விளையாட்டாகப் பண்ண வேண்டும் என்றுதான் பண்ணினேன். ஆனால் வெற்றிமாறன் உடனே கையிலிருந்த பேடை போட்டுவிட்டு, உடனே என் இடத்தில் போய் உட்கார்ந்தார். இவர் சரியாக பண்ணிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன். படுத்து, எழுந்து, அழுது நடித்துக் கொண்டே இருக்கிறார். அப்போது தான் நான் சும்மா இருந்திருக்க வேண்டும், தப்பு பண்ணிட்டோம் என நினைத்தேன். பின்பு அவரை மாதிரி நடிக்காமல், நான் வேறு மாதிரி நடித்தேன்.

ரொம்ப நேரம் கழித்து பாலு மகேந்திரா சார் என்னை அழைத்தார். ‘என்ன யோசிக்கிற’ என்று கேட்டார். ‘உங்களுக்கு நான் நடித்தது பிடித்ததா, வெற்றி நடித்தது பிடித்ததா? இரண்டுக்குமே ஒரு மாதிரியே தான் இருந்தீர்கள்’ எனக் கேட்டேன். அவர் அளவுக்கு நான் பண்ணிட்டேனா என்று சந்தேகமாக இருக்கிறது என்று சொன்னேன். சிரித்துக் கொண்டே ‘பிள்ளைகளில் எது சிறந்தது என்று கேட்கிறாய். இது பதிலளிக்க முடியாது’ என்று போய்விட்டார்.

அன்று எங்கள் இருவரையும் சகோதரர்களாகத்தான் பார்த்தார் பாலு மகேந்திரா சார்.

அன்றில் இருந்து இன்றுவரை நானும் வெற்றியும் சகோதரராக இருந்து வருகிறோம். சிவசாமி என்ற வயதுக்கு மீறிய கதாபாத்திரம் நடிப்பதற்குத் தைரியம் வேண்டும் என்கிறார்கள். அதைத் தாண்டி, நான் இதைச் செய்வேன் என்று நம்பிக்கை வைத்த வெற்றிமாறனுக்கு நன்றி.

இந்தப்படம் ரிலீஸாகும் போது நான் ஊரில் இல்லை. எனக்கு ரிசல்ட் என்னனு தெரியல. கஷ்டமா இருந்தது. அப்ப தான் எனது அம்மா தொலைபேசியில் தொடர்புகொண்டு பெரிய வெற்றி அடையும் என சொல்கிறார்கள் என சொன்னார். ஆனால் நீ தூரமா இருக்கியேப்பா அப்படினு சொன்னாங்க. அப்ப தான் நான் சொன்னேன். வெற்றி என் பக்கத்திலேயேதான்  இருக்கும்மான்னு “நான் வெற்றிமாறனைச் சொன்னேன். இது எல்லோருக்குமான வெற்றி. வெற்றிமாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும். நமக்கு எல்லாம் நல்லாகவே முடியும்.”

இவ்வாறு தனுஷ் பேசினார்.