அகடு விமர்சனம்
கொடைக்கானலுக்கு நான்கு நண்பர்கள் சுற்றுலா செல்கின்றனர், அவர்களின் விடுதிக்கு எதிரே டாக்டர் தம்பதி மற்றும் அவர்களது மகள் ஆகியோர் தங்குகின்றனர். நண்பர்களின் அணுகுமறையால் கவர்ந்த தம்பதியர், அவர்களுடனே கொடைக்கானலை சுற்றிப் பார்க்கின்றனர். அந்த மகிழ்ச்சி கொஞ்ச நேரமே நீடிக்கிறது, ஒரு நாள் காலையில் மகள் மற்றும் ஒரு நண்பர் காணாமல் போகின்றனர். இந்த மர்மத்தை கண்டுபிடிக்க போலீஸ் விரைகிறது. தேடுதல் வேட்டையில் புதரில் நண்பரின் உடல் மட்டும் கிடைக்கிறது. இதனால் யார் நண்பரை கொலை செய்து சிறுமியை கடத்தினார்கள் என்பதை கண்டுபிடிக்க போலீஸ் மும்முரமாக களமிறங்குகின்றனர். இறுதியில் சிறுமி கிடைத்தாரா? கொலை செய்தது யார்? எதற்காக? என்பதே திடுக்கிடும் க்ளைமேக்ஸ்.
இதில் போலீஸ் அதிகாரியாக உருட்டல்,மிரட்டலில் ஜான் விஜய், சித்தார்த், முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நண்பராக ஸ்ரீராம் கார்த்திக், அஞ்சலி நாயர், ரவீனா, விஜய்ஆனந்த் மற்றும் பலரின் உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது.
இசை-ஜான் சிவநேசன், படத்தொகுப்பு-தியாகு, ஒளிப்பதிவு-சாம்ராட் அனைவருமே படத்திற்கு தகுந்தவாறு முனைப்புடன் செயலாற்றி காட்சிகளில் தனித்து நிற்கின்றனர்.
சில பயணம் மகிழ்ச்சி தரும், சில பயணம் அதிர்ச்சி தரும் இதில் இரண்டாவது வகையை சார்ந்தது தான் அகடு திரைப்படம். இனி;மையாக செல்லும் பயணம், தடம் மாறி க்ளைமேக்ஸ் காட்சி வரை விறுவிறுப்பு குறையாமல் விரசமில்லாமல் யதார்த்தமாகவும், சிறப்பாகவும் இயக்கியிருக்கிறார் எஸ்.சுரேஷ்குமார். போதைக்கு அடிமையாகும் பெண் தன்னிலை மறந்து செய்யும் காரியத்தால் ஒரு குடும்பமே பாதிக்கப்படுவதை யதார்த்தமாகவும், இயல்பாகவும் கொடுத்து எச்சரிக்கையோடு விழிப்புணர்வுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார்.
மொத்தத்தில் சௌந்தர்யன் பிக்சர்ஸ் சார்பில் விடியல் ராஜூ தயாரித்திருக்கும் அகடு, தீய பழக்கத்தால் நட்பு, குடும்பம் விரிசல் அடைவதும், இன்பச் சுற்றுலா துன்பச் சுற்றுலாவாக தடம் மாறுவதை சொல்லும் படம்.