TN GST Collection : தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி பங்களிப்பு கடந்தாண்டு செப்டம்பரைவிட 21% அதிகரிப்பு..
ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாத வரி வருவாய் குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு மாதத்தில், மத்திய ஜி.எஸ்.டி.யாக 29 ஆயிரத்து 818 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே சமயம், மாநில ஜி.எஸ்.டி.யாக 37 ஆயிரத்து 657 கோடியும், ஒருங்கிணைந்த வரியாக 83 ஆயிரத்து 623 கோடி ரூபாயும் வசூலாகி உள்ளது. இந்நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தை விட, நடப்பு ஆண்டில் 10 சதவீதம் வரி வசூல் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில் 4 ஆவது முறையாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை ஜி.எஸ்.டி வருவாய் தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் ஜிஎஸ்டி வரி வருவாயில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மணிப்பூரில் 47 சதவீதம் அதிகரித்து முதலிடத்தில் உள்ளது.
இதையடுத்து 33 சதவீதத்துடன் தெலங்கானா இரண்டாம் இடம் வகிக்கிறது, தமிழ்நாடு 5 ஆவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதத்தில் 10 ஆயிரத்து 481 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 21 சதவீதம் அதிகமாகும்.