தமிழக சட்டசபை தேர்தல் 2021: ரிசல்ட் வரும்போது எங்கள் பலம் தெரியும் : விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த்

0
12

தமிழக சட்டசபை தேர்தல் 2021: ரிசல்ட் வரும்போது எங்கள் பலம் தெரியும் : விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க – தே.மு.தி.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அ.ம.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.ம.மு.க கூட்டணியில் தே.மு.தி.க தாமதமாக இணைந்தது. தே.மு.தி.க-வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன்னரே அ.ம.மு.க தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்திருந்தது. தே.மு.தி.க-வுடன் கூட்டணி உருவான நிலையில் முன்னதாக அறிவித்த வேட்பாளர்களை அ.ம.மு.க வாபஸ் பெற்றது.

இந்நிலையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை அ.மு.ம.க பொதுச்செயலாளர் தினகரன் நேற்று சென்னை கோயம்பேடு தே.மு.தி.க அலுவலகத்தில் சந்தித்தார். ‘தீய சக்தி தி.மு.க-வை அதன் கூட்டணியையும், துரோக சக்தியான அ.தி.மு.க-வை அதன் கூட்டணியையும் தேர்தலில் வீழ்த்த தே.மு.தி.கவை கூட்டணிக்கு அழைத்தோம் என்றார் டிடிவி தினகரன்.

தே.மு.தி.க சார்பில் விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவருடன் சுதீஷ் வந்திருந்தார்.

வேட்புமனுத்தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “தமிழகத்தை பொருத்தவரையில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க வலுவாக கட்சியாக இருக்கிறது. கிராமங்கள் தோறும் கிளை கழகம் உள்ள மாபெரும் இயக்கமாகதான் தே.மு.தி.க இருக்கிறது. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மே 2ம் தேதி ரிசல்ட் வரும்போது எங்கள் பலத்தை பார்ப்பீர்கள்” என்றார்.