முகக் கவசத்தில் தங்கம் கடத்திய நபர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார்

0
28

முகக் கவசத்தில் தங்கம் கடத்திய நபர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார்

சென்னை, ஃபிளை துபாய் விமானம் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்த புதுக்கோட்டையை சேர்ந்த முகமது அப்துல்லா, 40, என்பவர் விமான நிலையத்தை விட்டு அவசரமாக வெளியேற முயன்றதையடுத்து, வெளியே செல்லும் வழியில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

விசாரணையின் போது அவர் பதட்டத்துடன் காணப்பட்டதாலும், அவரளித்த பதில்கள் தெளிவாக கேட்காததாலும், அவரது முகக் கவசத்தை கழட்டுமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது முகக்கவசம் வழக்கத்தை விட அதிக எடையில் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அவரது முகக்கவசம் கத்தரித்து திறக்கப்பட்டதில், இரண்டு முகக்கவங்களை ஒன்றாக இணைத்து தைத்திருந்ததும், அவற்றின் நடுவே தங்கப் பசை வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 24 கேரட் கொண்ட ரூ 2.93 லட்சம் மதிப்புடைய 65 கிராம் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அவரது பையை சோதனை செய்து பார்த்த போது, ஐபோன் 12 புரோ 10, பயன்படுத்திய ஐபோன்கள் 8, பயன்படுத்திய மடிக் கணினிகள் 9, 2 பெட்டிகளில் சிகரெட்டுகள் ஆகியவை கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ 8.2 லட்சமாகும்.

மொத்தம் ரூ 11.13 லட்சம் மதிப்புடைய தங்கம், ஐபோன்கள், பயன்படுத்திய மடிக் கணினிகள் மற்றும் சிகரெட்டுகள் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்தி குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.