டெல்லியில் பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

0
42

டெல்லியில் பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி,

பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் குடிமக்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ போன்ற விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன. இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படவில்லை.

எனவே கடந்த ஆண்டு (2020) மற்றும் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் ஜனாதிபதி மாளிகையில் 2 நாட்களாக வழங்கப்படுகின்றன. இதில் முதற்கட்டமாக 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 141 பேருக்கு வழங்கப்பட்டன. இதில் 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது, 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அடங்கும்.

இந்நிலையில், டெல்லியில் 2-வது நாளாக பத்ம விருதுகளை சாலமன் பாப்பையா, தமிழக வீராங்னை அனிதா உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கினார்.

மக்களவை முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. முன்னாள் மத்திய மந்திரி ராம்விலாஸ் பாஸ்வானுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. விருதை அவரது மகன் சிராக் பாஸ்வான் பெற்றுக் கொண்டார்.

மூத்த சிற்பி சுதர்சன் சாஹூக்கு பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தால் வழங்கினார்.

அசாம் முன்னாள் முதல்-மந்திரி தருண் கோகோய்க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை அவரது மனைவி டோலி கோகோய் பெற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

“காடுகளின் கலைக்களஞ்சியம்” 30,000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு சாதனை : 77 வயதில் பத்ம ஸ்ரீ விருது

77 வயதாகும் துளசி கவுடா கர்நாடகாவின் அங்கோலா தாலுக்காவின் ஹொன்னாலி கிராமத்தைச் சேர்ந்தவர்.இவர் 30,000 மேற்பட்ட மரக்கன்றுகளை நட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். கடந்த ஆறு தசாப்தங்களாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

1944 ஆம் ஆண்டு ஹக்கலி பழங்குடி குடும்பத்தில் பிறந்தவர் துளசி கவுடா. காடுகளின் மரங்கள் மற்றும் தாவரங்களைப் பற்றிய அவரது விரிவான அறிவை கொண்டு இருப்பதால் “காடுகளின் கலைக்களஞ்சியம்” என்று அனைவராலும் அழைக்கப்படும் அவர் அங்குள்ள மக்களால் ‘ மரங்களின் தெய்வம் ” என்றும் அழைக்கப்படுகிறார்.

நேற்று நடந்த விழாவில் விருது வழங்குவதற்காக இவரது பெயர் அழைக்கபட்டபோது ஜனாதிபதியை நெருங்கிய துளசி கவுடா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கைகூப்பி மரியாதை செலுத்தினார் . பதிலுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் , அமித்ஷாவும் அவரை நோக்கி கைகூப்பி மரியாதை செலுத்தினர் . இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அறிவித்த பத்ம விபூஷண், மகன் பெற்றுக்கொண்டார்

கலை உலகிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக பாடகரும் இசையமைப்பாளருமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விழாவில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அறிவிக்கப்பட்டு இருந்த பத்ம பூஷண் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்று கொண்டார் .

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாட்களில் நான்கு தொகுதிகளாக வழங்குகிறார்.எஸ்.பி.பி என ரசிகர்கள் அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இறந்தார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி தனது மெல்லிய குரலால் பல கோடி இதயங்களை வென்றவர் . மேலும் அவர் ஒரு நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இவரது மகன் எஸ்.பி.சரண் பாடகரும் தயாரிப்பாளரும் ஆவார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் 2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ மற்றும் 2011 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதுகளை பெற்று உள்ளார் இதை தவிர அரசாங்க விருதுகள் மற்றும் திரைப்படத் துறை விருதுகளுடன் கூடுதலாக ஆறு தேசிய விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.

“விதைகளின் தாய் ” பத்மஸ்ரீ விருது பெற்றார் ராஹிபாய் சோமா போப்பரே

ஜனாதிபதி மாளிகையில் நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் விருது பெற்றவர்களில் ராஹிபாய் சோமா போப்பரையும் ஒருவர் ஆவார். இவர் விவசாய துறையில் ஆற்றிய அரும்பணிக்காக பத்ம ஸ்ரீ விருது பெற்றார். 1964 ஆம் ஆண்டு பிறந்த போப்பரே, மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள அகோலே பழங்குடியினர் தொகுதியில் உள்ள கொம்ப்ளே கிராமத்தைச் சேர்ந்த மகாதேவ் பழங்குடி விவசாயி ஆவார்.

சிறுவயதில் வறுமையின் காரணமாக அவரால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. அதனால் அவருக்கு பத்து வயதாக இருந்தபோது தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக விவசாய கூலி மற்றும் மாடு வளர்ப்பில் வேலை செய்யத் தொடங்கினர் .

பின்னர் தனது 17 வயதில் சோமா போப்பரை என்பவரை மணந்தார் ராஹிபாய் . விவசாயமே குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமாக இருந்தது. பள்ளிக்குச் செல்லாவிட்டாலும், பயிற்சி மற்றும் அனுபவத்தின் மூலம் வேளாண் பல்லுயிர், காட்டு உணவு வளங்கள் மற்றும் பாரம்பரிய கலாச்சாரம் பற்றி அவர் கற்றுக்கொண்டார்.

விதை மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை அடைவதற்கு வேளாண் பல்லுயிர் மற்றும் காட்டு உணவு வளங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்பதை அவர் தனது அனுபவங்களின் மூலம் அறிந்து பிறருக்கு கற்றுக்கொடுத்தார்.உள்நாட்டு விதைகளை தயாரித்து மற்றவர்களுக்கு வழங்கத் தொடங்கினார்.மேலும் அந்த விதைகளை அவர் சுய உதவிக் குழுவின் உறுப்பினர்களுக்குப் பரிசாக வழங்கி வருகிறார்.

ராஹிபாய் இப்போது விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு பயிர் தேர்வு, மண் வளம் பயிற்சிகள் மற்றும் பூச்சி மேலாண்மை போன்றவற்றைக் கற்றுக்கொடுக்கிறார். அவர் விவசாயிகளுக்கு நாட்டுப் பயிர் நாற்றுகளை வழங்கி அவர்களை நாட்டு வகைகளுக்கு மாற ஊக்குவிக்கிறார். அகமதுநகர் மாவட்டம் முழுவதும் சுமார் 3500 விவசாயிகளுக்கு இதுவரை ராஹிபாய் பயிற்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரஞ்சு பழம் விற்று பள்ளிக்கூடம் கட்டிய தொழிலாளி – பத்மஸ்ரீ விருது வழங்கி ஜனாதிபதி கவுரவம்

இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர்களில் கர்நாடகாவைச் சேர்ந்த ஆரஞ்சு பழ விற்பனையாளர் ஹரேகலா ஹஜப்பாவும் ஒருவர் ஆவார். சிறந்த சமூக சேவை ஆற்றியதற்காக இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்.

ஆரஞ்சு பழம் விற்கும் தொழிலில் இருந்து தனது சேமிப்பைப் பயன்படுத்தி, ஹரேகலா ஹஜப்பா, கர்நாடகாவின் தக்ஷிண் கன்னடா மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்காக ஒரு பள்ளியைக் கட்டினார்.

“நான் கல்வி கற்கவில்லை. இது எனது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்க வேண்டும் என்ற கனவோடு ஒரு பள்ளியை உருவாக்க எனக்கு வழிவகுத்தது ” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுமித்ரா மஹாஜனுக்கு ‘பத்ம பூஷன்’ விருது

எட்டு முறை எம்.பி., யாக பதவி வகித்தவரும், முன்னாள் லோக்சபா சபாநாயகருமான சுமித்ரா மஹாஜனுக்கு, ‘பத்ம பூஷன்’ விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

பத்ம பூஷன் விருது பெற்றார் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து

விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

பி.வி சிந்து நவீன காலத்தில் இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். 26 வயதான அவர் 2016- இல் ரியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார், அதைத் தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். இதன் மூலம் இரண்டு தனிநபர் ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி ஆனார். 2019 இல் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார்.

விருதினை பெற்றபின் பி.வி. சிந்து கூறுகையில், “நாட்டிற்கு சிறந்த சேவை செய்ததற்காக மதிப்புமிக்க விருதை பெற்றதை பெருமையாக கருதுகிறேன். இது ஒரு பெருமையான தருணம். நான் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது எனக்கு நிறைய ஊக்கத்தை அளிக்கிறது. எனக்கு அடுத்து சில போட்டிகள் வர உள்ளன. அதில் எனது சிறப்பான பங்களிப்பை கொடுப்பேன் ” என்று சிந்து கூறினார்.