கொரோனா நிவாரணம் ரூ.4000… முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து

0
17

கொரோனா நிவாரணம் ரூ.4000… முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து

தமிழக முதல்வராக இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் இருக்கையில் அமர்ந்து பணிகளைத் தொடங்கினார். சென்னை தலைமைச் செயலத்தில் காவல்துறை மரியாதையை ஏற்ற அவர், முதல்வர் இருக்கையில் முதன்முறையாக அமர்ந்து பணிகளைத் தொடங்கினார்.

முதல்வர் இருக்கையில் அமர்ந்த பின்னர் 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்ட கோப்புகளில் உள்ள அறிவிப்புகளின் விவரம் பின்வருமாறு:-

1. ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் – கோப்பில் கையெழுத்திட்டார். முதல் தவணையாக ரூ. 2000 வீதம் மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் கையெழுத்திட்டார்.

2. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு – கோப்பில் கையெழுத்திட்டார். இந்த ஆணை மே16ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.

3. அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் நாளைமுதல் இலவசமாக பயணிக்கலாம்.

4. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைபெறும் மக்களின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும். காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனை கட்டணத்தை அரசே ஏற்கும்.

5. மனுக்கள்மீது 100 நாட்களுக்குள் தீர்வுகாண ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தை செயல்படுத்த புதிய துறை உருவாக்கம்

ஆகிய 5 முக்கிய கோப்புகளில் முதல்வர் மு.க ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.