வி.கே.சசிகலா அறிக்கை:  சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரக் கோரி ஆதரவாளர்கள் தர்ணா போராட்டம்

0
1

வி.கே.சசிகலா அறிக்கை:  சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரக் கோரி ஆதரவாளர்கள் தர்ணா போராட்டம்

சென்னை, தான் அரசியலை விட்டே விலகுவதாகவும், ஜெயலலிதா ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வதாகவும் சசிகலா திடீரென கூறியுள்ளார். இது குறித்து வி.கே.சசிகலா நேற்றிரவு வெளியிட்டுள்ள அந்த பரபரப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நான் என்றுமே வணங்கும் என் அக்கா ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு இணங்க, அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர ஒரு தாய் வயிற்று பிள்ளைகளான, ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று ஜெயலலிதா நமக்கு காட்டிய, தி.மு.க.வை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அவரின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

என் மீது அன்பும், அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத்தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.

நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்துக்காகவோ, அதிகாரத்துக்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கி வரும் என் அக்கா ஜெயலலிதாவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சசிகலா திடீரென அறிவித்துள்ள நிலையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறி இருப்பதாவது:-

தான் ஒதுங்கி இருந்தால் தான் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதை தெரிந்து இந்த முடிவை எடுத்து அறிவித்து இருக்கிறார்.

தேர்தல் களத்தில் தான் ஒரு பேசுபொருளாக இருக்க அவர் விரும்பவில்லை என்பதால் இத்தகைய முடிவை எடுத்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமையவேண்டும் என அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய சுயமான முடிவு இது. எனது சித்தி என்பதற்காக அவர் மீது எனது கருத்துகளை நான் திணிக்க இயலாது. அவரின் மனசாட்சியாக நான் பேசவும் முடியாது” என கூறி உள்ளார்.

இந்த நிலையில் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரக் கோரி அவரது ஆதரவாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். தியாக்ராய நகரில் உள்ள சசிகலா வீட்டின் முன் அவரது ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் போலீசார் கலைந்து போகக்கூறியும் 6 பேர் அடம்பிடித்து அங்கு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.