‘டீச் ஃபார் சேஞ்ச்’ (Teach for Change) தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பள்ளிகளை தத்தெடுக்கும் நடிகை லக்ஷ்மி மட்ஞ்சு
நடிகை மற்றும் தயாரிப்பாளராக பிஸியாக வலம் வரும் லக்ஷ்மி மஞ்சு, சமூக பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில், ‘டீச் ஃபார் சேஞ்ச்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 167 பள்ளிகளை தத்தெடுத்துள்ளார்.
லக்ஷ்மி மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள ‘அக்னி நட்சத்திரம்’ மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் லக்ஷ்மி மஞ்சுவுடன், அவரது தந்தையும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான மோகன் பாபு நடித்திருப்பதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை தாண்டி பிற மாநிலங்களிலும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் பிஸியாக இருக்கும் லக்ஷ்மி மஞ்சு, ’டீச் ஃபார் சேஞ்ச்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களின் பள்ளிகளை தத்தெடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். லக்ஷ்மி மஞ்சுவின் இத்தகைய முயற்சியின் மூலம் பின்தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கப் போகிறது.
தெலுங்கானாவின் ஐதராபாத் மாவட்டத்தில் உள்ள 15 பள்ளிகள், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள 25 பள்ளிகள், யாதாத்ரியில் உள்ள 81 பள்ளிகள், ஸ்ரீகாகுளத்தில் உள்ள 16 பள்ளிகள் மற்றும் கட்வாலில் உள்ள 30 பள்ளிகள் என மொத்தம் 167 பள்ளிகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன.
கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கும் ’டீச் ஃபார் சேஞ்ச்’ அமைப்பு புதுமையான கற்பித்தல் முறைகள் மூலம் மாணவர்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
சுமார் 16,497 மாணவர்கள் பயனடையும் இந்த திட்டத்தில், கட்வாலில் உள்ள பள்ளிகளுக்கான தேர்வு செயல்முறை குறித்து லக்ஷ்மி மஞ்சுவிடம் கேட்ட போது, “குறிப்பிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் கட்வாலில் உள்ள பள்ளிகளை நாங்கள் கண்டறிந்தோம். 1 முதல் 5 ம் வகுப்பு வரை குறைந்தபட்சம் 50 மாணவர்கள் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்குவதுடன், மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடிப்படை மற்றும் மாணவர்களின் முன்னேற்றத் தேர்வுகளை நடத்தத் தயாராக இருக்கிறோம்.” என்றார்.
’டீச் ஃபார் சேஞ்ச்’ நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலராக இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடர்பான அனைத்து அன்றாட நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடுவதில் லக்ஷ்மி மஞ்சு முக்கிய பங்கு வகிக்கிறார். இந்த அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்டு பணியாற்றுவதோடு, ஆசியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறது. ஆடியோ – விடியோ பாடத்திட்டத்தை வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல், பாடத்திட்டங்கள் பற்றிய அறிக்கைகளை உருவாக்குவதோடு குழந்தைகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுதல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நடிகை மற்றும் தயாரிப்பாளராக பிஸியாக இருப்பதோடு, விரைவில் வெளியாக இருக்கும் தனது ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் தீவிரம் காட்டினாலும், இதுபோன்ற சமூக பணிகளுக்கும் தனது நேரத்தை ஒதுக்கி பணியாற்றும் லக்ஷ்மி மஞ்சு, தனது பணிகளுக்கான நேரத்தை திறம்பட நிர்வகிப்பது குறித்து கூறுகையில், “நான் பல பணிகளை விரும்பி செய்வதோடு அதற்கேற்ப எனது அட்டவணையை சரியான முறையில் திட்டமிடுகிறேன். என் குழுவினருடன் அனைத்து நேரங்களிலும் பயணிக்க தயாராக இருப்பதோடு, தனிப்பட்ட முறையிலும் உயர் அதிகாரிகளுடனான சந்திப்புகளிலும் கலந்துக்கொள்கிறேன். என் பணிகளுக்கு உறுதுணையாக என்னுடன் பயணிக்கும் அர்ப்பணிப்புள்ள ஒரு குழுவினர் என்னுடன் இருக்கிறார்கள். அவர்கள் கிடைத்தது என் அதிஷ்ட்டம் என்று தான் நினைக்கிறேன்.” என்றார்.
தத்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் செயல்படுத்த இருக்கும் திட்டங்கள் மற்றும் முன்னேற்ற முயற்சிகளின் நிலைத்தன்மை குறித்து கேட்ட போது, “கல்வி ஆண்டு முழுவதும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளோம். அவர்களின் விலைமதிப்பற்ற ஆதரவும், கூட்டாண்மையும் எங்கள் முயற்சிகளின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.
ஐதராபாத், ரங்காரெட்டி, யாதாத்ரி, ஸ்ரீகாகுளம் மற்றும் கட்வால் ஆகிய மாவட்டங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் ஸ்மார்ட் வகுப்பறை முயற்சிகளை செயல்படுத்தி அதிக மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.
தெலுங்கானா அரசாங்கத்துடனான ’டீச் ஃபார் சேஞ்ச்’ ஒத்துழைப்பு என்பது தத்தெடுப்புத் திட்டம் மட்டும் அல்ல, அரசுப் பள்ளி ஆசியர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்துடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்.” என்றார்.
மேலும், இந்தியாவில் கல்வி முறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மற்றும் ’டீச் ஃபார் சேஞ்ச்’ போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய லக்ஷ்மி மஞ்சு, “அரசு பள்ளிகளில், குறிப்பாக தற்போது வருகை குறைவாக உள்ள கிராமப்புறங்களில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் புதிய கற்பித்தல் முறைகளை அறிமுகப்படுத்துவதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அரசாங்கம் ஆதரிக்கவும், ஊக்குவிக்கவும் வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.