கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் தங்க மூக்குத்தி இலவசம்

0
12

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் தங்க மூக்குத்தி இலவசம்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்டத்தை சேர்ந்த 50 கிராம மக்கள், தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தங்கள் ஊர் பக்கமே வராதீர்கள் என சுகாதாரத் துறை அதிகாரிகளை விரட்டியடித்துள்ளனர். இதுவரை தங்கள் கிராமங்களில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்பட்டதில்லை எனவும், தங்களுக்கு உடலில் எந்த குறையும் இல்லாதபோது எதற்கு தடுப்பூசி எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கே அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

உள்ளூர் தெய்வத்திற்கு நாங்கள் படையில் போட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டதாகவும், அவரது ஆசியால் எங்கள் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை எனவும் கூறி, உலகை மிரட்டும் கொரோனாவிற்கே ஆச்சரியம் அளித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட ராஜ்கோட்டில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக, அங்குள்ள பொற்கொல்லர்கள் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பெண்களுக்கு இலவசமாக தங்க மூக்குத்தி வழங்கப்படுகிறது. அதேபோல ஆண்களுக்கு சமையலறையில் பயன்படுத்தப்படும் Hand Blender போன்ற கருவிகளையும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

இதற்காக தடுப்பூசி மையத்திலேயே மூக்குத்திகளை பரப்பி வைத்திருக்கின்றனர் பொற்கொல்லர்கள்.. ஊசி போடப் போனால் காய்ச்சலோடு திரும்புவார்கள் என வதந்தி பரவும் நிலையில் தங்க மூக்குத்தியோடு வீடு திரும்பியவர்களைப் பார்த்து பக்கத்து வீட்டினரும் கூட தடுப்பூசி போட ஓடோடி வருகிறார்களாம்.

ராஜ்கோட்டில் பொற்கொல்லர் பிரதான தொழிலாக உள்ள நிலையில், ஆயிரக் கணக்கானோர் குடிசை தொழிலாகவே அதனை செய்து வருகின்றனர். பொதுமக்களின் நலனை சார்ந்தே எங்களது தொழிலும் இருப்பதால் அவர்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவிக்க, இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொற்கொல்லர் சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.