அருள்மிகு அம்மச்சார் அம்மன் (எ) ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்

0
311

அருள்மிகு அம்மச்சார் அம்மன் (எ) ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், ஈயகொளத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அம்மச்சார் அம்மன் (எ) ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து இந்த கோவில் வளாகத்தின் நுழைவுப்பகுதியில் தற்போது அழகிய வேலைப்பாடுகளுடன் 33 அடி உயரத்தில் 3 நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது.

இந்த கோவிலில் தற்போது கட்டப்பட்டுள்ள 3 நிலை ராஜகோபுரம் மற்றும் அருள்மிகு அம்மச்சார் அம்மன் (எ) ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா 16-11-2024 அன்று காலை மகாகணபதி வேள்வி, நவக்கிரக நலவிண்ணப்பம், திருமகள் (லெட்சுமி) வேள்வி, நிலபதி (வாஸ்து) பூசை, எண்திசை காவலர் வழிபாடு நிறைஅவி அளித்தல் மகா தீபாராதனை, கோபுர கலசம் சுவாமிகள் கருவறையில் எழுந்தருளச்செய்தல் (பிரதிஷ்டை) உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தன. மாலை யாகசாலைக்கு திருக்கலசங்கள் எழுந்தருளச் செய்தல், வாயில்காவலர் பூஜை, பரிவாரங்கள் பூசை, முந்துதமிழ் மாலை முதல்விக்கு முதல்கால வேள்வி, தம்பதிகள் பூசை, சுமங்கலிகள் பூசை, கன்னிபூசை, வடுக பூசை, சங்கல்பம், நிறைஅவி அளித்தல், நாத உபாசனை, மகாதீபாரதனை, எண்வகை மருந்து சாத்துதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தன. இந்த யாகசாலை பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் திரளாகக்கலந்து கொண்டனர்.

17-11-2024 ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 9.00 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் ஆநிறை (கோ) பூசை, முத்தமிழ் முத்தாலம்மனுக்கு இரண்டாம் கால வேள்வி, நிறை அவி அளித்தல் (மகாபூர்ணாஹ{தி), திருவருள் ஏற்றம் (நாடிசந்தானம்), திருக்கலசங்கள் எழில்ஞான உலா நிகழ்ச்சிகளும் நடந்தேரியது. காலை 9.45 மணிக்கு இராஜகோபுரம், விமானங்கள் குடமுழுக்கு, காலை 10.15 மணிக்கு விநாயகர், முருகர், முத்தாலம்மன், நவக்கிரகம் மற்றும் பரிவாரங்கள் குடமுழுக்கு தொடர்ந்து காலை 10.30 மணிக்கு எல்லாம் வல்ல அகிலாண்ட நாயகி வேண்டும் வரம் அளிக்கும் வேண்டவரசி, முப்பத்திரண்டு அறங்கள் செய்யும் அறம் வளர்த்த நாயகி, குழந்தை வரம் அளிக்கும் அன்னை, கண்ணொளி வழங்கும் கண்ணுடைய நாயகி, பசிப்பிணி அன்னபூரணி நோய்களை நீக்கும் மாரி, மழைபொழியும் மாரி, இடர் களையும் நீக்கும் இன்பநாயகி என பல பெயர் பெற்ற அன்னை ஈயகொளத்தூரில் குலதெய்வமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீஅம்மச்சார் (எ) ஸ்ரீமுத்தாலம்மன் திருக்கோயில் கலவை தவத்திரு. ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்தா சுவாமிகள் தலைமையில் திருநெறிய தெய்வத்தமிழில் திருக்குட நன்னீராட்டு (கும்பாபிஷேகப் பெருவிழா) மற்றும் ஸ்ரீமுத்தாலம்மன் மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதை தொடர்ந்து அன்னதானம் மற்றும் மாலை 6.00 மணிக்கு அம்மன் திருவீதி உலா அறங்கேறியது.

விழா ஏற்பாடுகளை அருள்மிகு ஸ்ரீஅம்மச்சார் (எ) ஸ்ரீமுத்தாலம்மன் அறக்கட்டளை குழுவும், குலதெய்வ வழிபாட்டாளர்கள், கிராம பொதுமக்கள், அறங்காவலர்கள், திருப்பணிக்குழுவினர் செய்துள்ளனர்.