அனுமன் ஜெயந்தி விழா: 1 லட்சத்தி 8 வடையிலான மாலையுடன் காட்சியளிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்
னுமன் ஜெயந்தி விழா முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்தி 8 வடையினால் ஆன மாலை அலங்காரம். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மார்கழி மாத அமாவாசையில் வரும் மூலம் நட்சத்திர தினத்தன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அனுமன் ஜெயந்தியை ஓட்டி நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஒரே கல்லில் ஆன 18 அடி உயரம் கொண்ட நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்தி 8 வடைகளால் ஆன மாலை அணிவிக்கப்பட்டு சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் இருக்கும் ஆஞ்சநேயரை, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
இதனை தொடர்ந்து பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட நறுமண பொருட்களைக் கொண்டு அபிஷேகமும் அதனை தொடர்ந்து சுவாமிக்கு தங்க கவச அலங்காரமும் செய்யப்பட உள்ளது. அனுமன் ஜெயந்தியை ஒட்டி ஒரு டன் வண்ணப் பூக்களைக் கொண்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆஞ்சநேயரை எளிதாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் நகரில் கோட்டை, பூங்கா சாலை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, 50 இடங்களில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.