1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 3-ந் தேதி நடக்கிறது

0
1274

சிவன் கோவில்களில் பிரசித்தி பெற்ற 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சுமார் ரூ.9 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன.

kapaleeswararஅதாவது, சேதமடைந்த 17 விமானங்கள், பெரிய தேர், 4 சிறிய தேர்கள், அனைத்து மர வாகனங்கள், அறுபத்து மூவர் பல்லாக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் செப்பனிடப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளன. ராஜகோபுரத்திற்கு வர்ணம் பூசும் பணியும், விமான கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணியும் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளன.

இந்த நிலையில், நேற்று பாலாலயம் செய்யப்பட்டதுடன், யாக சாலை பூஜைகள் தொடங்கின. 2-ந் தேதி காலை 6 மணியளவில் விசேஷ சாந்தி கும்ப திருமஞ்சனமும், தீர்த்த வினியோகமும் நடக்கிறது. 3-ந் தேதி காலை 7.45 மணியளவில் கபாலீஸ்வரர் கும்பத்துடன் சன்னதியில் எழுந்தருளல் நடக்கிறது. தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.50 மணிக்குள் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சிங்கார வேலர், விநாயகர், அனைத்து விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதையொட்டி சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளில் இருந்து மயிலாப்பூருக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கு தடையின்றி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை இணை ஆணையர் காவேரி செய்து வருகிறார்.

கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறப்பு காவல் நிலையமும் அங்கு தொடங்கப்பட்டுள்ளது. கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.