ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி- டி2 ராக்கெட்

0
113

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி- டி2 ராக்கெட்

சென்னை, பிப்ரவரி 10, 2023

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, எஸ்.எஸ்.எல்.வி-டி2 என்ற புதிய ராக்கெட்டை இன்று (10.02.2023) காலை 9.18 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த சிறிய செயற்கைக்கோள் செலுத்தும் வாகனம், இ.ஓ.எஸ்-07 என்ற செயற்கைக்கோளுடன், ஜேனஸ்-1 மற்றும் ஆசாதி சாட்-2 ஆகிய இரண்டு செயற்கைகோள்களையும் 450 கிலோமீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.

சிறிய அல்லது நானோ செயற்கைகோள்களை 500 கிலோ மீட்டர் வரை சுமந்து சென்று சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்ட செயற்கைக்கோள் செலுத்து வாகனம், திட உந்துவிசை மற்றும் திரவ உந்துவிசை அடிப்படையிலான வேகத்தைக் குறைக்கும் தொகுதியின் 3 நிலைகளைக் கொண்டுள்ளது. இந்த வாகனம், விண்வெளியை அணுகும் செலவைக் குறைப்பதோடு, மீண்டும் திரும்புவதற்கான நேரத்தையும் குறைத்து, குறைந்தபட்ச ஏவுதல் உள்கட்டமைப்பில் பல செயற்கைக்கோள்களைத் தாங்கும் தன்மையைப் பெற்றுள்ளது.

156.3 கிலோ எடையுள்ள இ.ஓ.எஸ்-07 செயற்கைக்கோள், இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, புவி கண்காணிப்பு மற்றும் எதிர்கால தேவைக்கான ஆய்வு பணிகளுக்குப் பயன்படும். அமெரிக்காவின் அண்டாரிஸ் மென்பொருள் தளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஜேனஸ்-1, 10.2 கிலோ எடை கொண்ட தொழில்நுட்பம் சார்ந்த திறன்மிகு செயற்கைக்கோள் ஆகும்.

8.8 கிலோ எடை கொண்ட ஆசாதி சாட்-2 செயற்கைக்கோள், சென்னையில் இயங்கும் இந்திய விண்வெளி புத்தொழில் நிறுவனமான ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் குழுவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 750 மாணவிகள் இணைந்து இதனை வடிவமைத்திருப்பது, இந்த நானோ செயற்கைக்கோளின் மற்றொன்று சிறப்பம்சம்.

வெற்றியைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய இஸ்ரோ தலைவர் திரு சோம்நாத், இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துக்கள். இன்று நாம் புதிய செலுத்து வாகனத்தை நமது குழுவில் இணைத்துள்ளோம். மேலும் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தியுள்ளோம். இந்த வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். எஸ்எஸ்எல்வி டி -1 இல் ஏற்பட்ட குறைபாடுகளைக் கண்டறிந்து வெகு விரைவாக டி -2 ராக்கெட்டை தயாரித்து செலுத்தியுள்ளோம். மார்ச் இரண்டாவது வாரத்திற்கு மேல் ஜிஎஸ்எல்வி மார்க் 3 எல்எம்வி ராக்கெட் 36 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட உள்ளது. மார்ச் இறுதியில் பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்பட உள்ளது. மீண்டும் உபயோகிக்கக்கூடிய ராக்கெட்டுக்கான பரிசோதனையை சித்திரதுர்கா மையத்தில் வெற்றிகரமாகப் பரிசோதித்து வருகிறோம். மனிதர்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் ககன்யான் திட்டம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடலில்  வீரர்களை பத்திரமாக இறக்குவது பற்றிய பரிசோதனை நடந்து வருகிறது. மேலும், இந்த வருடத்தில் இன்னொரு ராக்கெட்டை ஏவ உள்ளோம்.

ஆளில்லா ராக்கெட்டையும் விண்ணில் ஏவ உள்ளோம். GSLV இந்த வருடத்தின் இறுதியில் ஏவ உள்ளோம். மேலும் பல PSLV ராக்கெட்டயும் இந்த வருடத்தில் ஏவ உள்ளோம். ஆசாதிசாட்டை வெற்றிகரமாக உருவாக்கிய இளம் குழுவினருக்கு எனது பாராட்டுக்கள் என்று சோம்நாத் குறிப்பிட்டார்.